ஆவேஷ் கான் டைட்டாக வீசிவிட்டு கொஞ்சம் இடம் கொடுத்து வீசிய ஒரு டெலிவரியை சரியாக கனெக்ட் செய்யாமல் எட்ஜ் ஆகி தினேஷ் கார்த்திக்கிடம் டெலனி கேட்ச் ஆனார். 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள். அயர்லாந்து சரிவை நோக்கி செல்வதை போல இருந்தது. இந்தச் சமயத்தில் க்ரீஸூக்குள் வந்த ஹாரி டெக்டர் அற்புதமான இன்னிங்ஸை ஆடினார். நிலைமையை மாற்றத் தொடங்கினார். அக்சர் படேல் மற்றும் உம்ரான் மாலிக்கின் ஓவர்களில் அதிரடியாக பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டார்.
சர்வதேச போட்டியில் உம்ரான் மாலிக்கின் முதல் ஓவர் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. 18 ரன்களை அள்ளிக் கொடுத்திருந்தார். உம்ரான் மாலிக்கின் பலமே அவரின் யார்க்கர்களும் ஷார்ட் பிட்ச் டெலிவரிகளும்தான். அந்த இரண்டிலுமே நேற்று அடிவாங்கியிருந்தார். யார்க்கரை துல்லியமாக வீச முடியாமல் திணறினார். திட்டத்தை மாற்றி ஷார்ட் பிட்ச் டெலிவரிகளாக வீச முயன்றார். ஆனால், யார் ஷார்ச் பிட்ச்சாக வீசினாலுமே டெக்டரும் டக்கரும் வெளுத்து வாங்கினர்கள் என்பதால் உம்ரான் மாலிக்கும் விதிவிலக்காக அமையவில்லை.
டக்கர் ஒத்துழைக்க டெக்டர் நின்று ஆடி அரைசதத்தைக் கடந்தார். இதனால் அயர்லாந்தும் சவாலான ஸ்கோரை எட்டியது. 12 ஓவர்களில் 108 ரன்களை எடுத்தனர்.
இந்தியா அணிக்கு 109 ரன்கள் டார்கெட். இந்த டார்கெட்டை எட்ட இந்திய அணி பெரிதாக சிரமப்படவே இல்லை. 9.2 ஓவர்களிலேயே டார்கெட்டை எட்டி போட்டியை வெற்றிகரமாக முடித்துவிட்டனர். அயர்லாந்தை போல் அல்லாமல் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடியிருந்தனர். இஷன் கிஷனும் தீபக் ஹூடாவும் ஓப்பனர்களாக வந்திருந்தனர். முதல் ஓவரையே இடது கை வேகப்பந்து வீச்சாளரான லிட்டில் வீசியிருந்தார்.