தனது ஆதர்சம் விராட் கோலி போலவே சிராஜும் போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சிறந்த ரசிகர். எப்போதும் காலை 8 மணிக்கு எழுந்திருக்கும் சிராஜ், டெஸ்ட் போட்டியின் கடைசி நாளன்று நிலைகொள்ளா மன நிலையில் 6 மணிக்கெல்லாம் எழுந்து விட்டதாக பேட்டியில் கூறியுள்ளார்.
முதல் நாள் ஹாரி புரூக் அடித்த ஷாட்டை பவுண்டரியில் கேட்ச் பிடித்து விட்டு, தெரியாமல் பவுண்டரிக்குள் விழுந்து விட்ட சிராஜினால்தான் ஆட்டம் 5-ம் நாளுக்கு வந்தது, இல்லையெனில் இவரே 4-ம் நாளிலேயே இங்கிலாந்தை பொட்டலம் கட்டியிருப்பார். அது சிக்ஸர் ஆனதும் அவருக்குள் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், அழுத்தம் தன்னை பற்றிக் கொள்ள விடாமல் அழுத்தத்தை எதிரணி மீது திருப்பி இரண்டு நீண்ட அட்டகாசமான ஸ்பெல்களை அவர் வீசினார். அதுவும் 5-ம் நாள் வந்தவுடனேயே பிரசித் கிருஷ்ணா 2 பவுண்டரிகளைக் கொடுத்ததும் ஜேமி ஸ்மித் ஆட்டத்தை முடித்து விடுவார் என்றே தோன்றியது. ஆனால், பிரசித் கிருஷ்ணாவும் மீண்டெழுந்தார்.
இந்நிலையில், சிராஜ் நேற்று ஆட்டம் முடிந்தவுடன் அளித்த பேட்டியில், “நான் பொதுவாக காலை 8 மணிக்குத்தான் எழுந்திருப்பேன். ஆனால், இன்று 6 மணிக்கெல்லாம் விழித்து விட்டேன். இன்றைக்கு எப்படியாவது வெற்றி பெற வேண்டும், நான் அதை முடிக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். காலையில் கூகுள் செய்து அந்த இமேஜைப் பார்த்தேன். அதாவது ரொனால்டோ படம் அதற்கு மேலே ‘BELIEVE’ எனும் வாசகம் அந்த வால்பேப்பரை நான் டவுன்லோடு செய்தேன். ஆகவே நம்பிக்கையே முக்கியம். அதுவே என் தாரக மந்திரம்” என்றார் சிராஜ்.
லார்ட்ஸ் டெஸ்ட்டில் ஜடேஜாவுக்கு இன்னும் ஒன்றிரண்டு ஓவர்கள் ஸ்டாண்ட் கொடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் எனும் போது ஆப் ஸ்பின்னர் பஷீர் பந்தில் பவுல்டு ஆன போது ஏற்பட்ட விரக்தி, ஹாரி புரூக்கிற்கு விடப்பட்ட கேட்ச் சிக்ஸ் ஆனதினாலும் அதன் பிறகு அவர் ஆட்டத்தை இந்திய அணியிடமிருந்து பறித்துச் சென்றதினால் ஏற்பட்ட சோகம் மற்றும் மன அழுத்தம், இவையெல்லாம் தன்னை பாதித்தாலும் விராட் கோலி சொல்வது போல் மீண்டும் மீண்டும் எழுந்து வந்து சிராஜ் காட்டிய போராட்டக் குணம் டோனி கிரேக் கூறும் ‘வாட் எ பிளேயர்’ என்ற வாசகத்தை நமக்கு நினைவுறுத்தவே செய்யும்.
சிராஜை பும்ராவுக்கு சப்போர்ட் ரோல் என்று முடிவு கட்டியது எத்தனை பெரிய தவறு? – சிராஜ்தான் லீடிங் பவுலர். இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் மூலம் இதை நிரூபித்து விட்டார். ஆனால், சிராஜ் வெறும் மாங்கு மாங்கென்று கடின உழைப்புடன் வீசும் உழைப்பாளி மட்டுமல்ல, சிந்திக்கும் பவுலர். இவரது ‘வாபிள் சீம்’ பந்துகள்தான் இங்கிலாந்தை இந்தத் தொடர் முழுதும் படுத்தி எடுத்து விட்டன. பந்து காற்றில் ஆடிக்கொண்டே வரும்போது உள்ளே ஸ்விங் ஆகுமா, வெளியே போகுமா என்பதில் பேட்டர்களுக்கு கடும் குழப்பத்தை விளைவித்தார் சிராஜ்.
முன்னாள் பயிற்சியாளர் பாரத் அருண் கூறுவதற்கேற்ப சிராஜ் வெறும் ஒர்க் ஹார்ஸ் மட்டுமல்ல, கெட்டிக்காரத்தனமும் சூட்சுமங்களும் நிறைந்த திறமையாளரே.