சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த நடிகை ரவீனாவின் வேட்பு மனுவைத் தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 2,000 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கவிருக்கிறது.
தற்போதைய தலைவர் சிவன் சீனிவாசன் தலைமையிலான அணி மீண்டும் போட்டியிடுகிறது. தவிர பரத் தலைமையில் ஒரு அணி, தினேஷ் தலைமையில் ஒரு அணி என மொத்தம் மூன்று அணிகள் போட்டியிடுகின்றன.
ஆர்த்தி சுயேட்சையாக தலைவர் பதவிக்கும் அவரது கணவர் கணேஷ்கர் சுயேட்சையாக துணைத் தலைவர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

சிவன் அணியைச் சேர்ந்தவரும் சங்கத்தின் தற்போதைய செயலாளருமான போஸ் வெங்கட் முதலில் போட்டியிடுவதாகச் சொல்லியிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை, அவர் போட்டியிலிருந்து ஒதுங்கி விட, அவருக்குப் பதில் நிரோஷா செயலாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
கடந்த திங்கள் கிழமை தொடங்கி புதன் வரை வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்த நிலையில், நேற்று மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.
இதில் தினேஷ் அணி சார்பாக செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகை ரவீனாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.