ஏமனில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் செவிலியர் நிமிஷா பிரியாவை காப்பாற்றும் முயற்சியாக கேரளாவில் மிகவும் மதிக்கப்படும் மற்றும் செல்வாக்கு மிக்க முஸ்லிம் மதகுருவான கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார், ஏமனில் உள்ள சில ஷேக்குகளுடன் பேசியுள்ளார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் சேவ் நிமிஷா பிரியா கவுன்சில் உறுப்பினருமான சுபாஷ் சந்திரா, “இன்று சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில் உறுப்பினர்கள் கிராண்ட் முஃப்தியை சந்தித்தனர். அதன் பின்னர் அவர் ஏமனில் உள்ள சில செல்வாக்கு மிக்க ஷேக்குகளுடன் பேசினார்,” என பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
“இறந்தவரின் உறவினர்கள் உட்பட செல்வாக்கு மிக்கவர்கள் சிலர் பங்கேற்கும் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக எங்களிடம் கூறப்பட்டுள்ளது,” என சந்திரா கூறினார்.
போரால் பாதிக்கப்பட்ட ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16ஆம் தேதி தண்டனை நிறைவேற்றப்பவுள்ளது
உள்ளூர்காரரும், அவரது முன்னாள் தொழில் கூட்டாளியுமான தலால் அப்தோ மஹ்தியை கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது ஏமனின் சனா நகரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நிமிஷா. தலால் அப்தோ மஹ்தியின் குடும்பம் மன்னிப்பு வழங்கினால், நிமிஷா மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்படலாம்.
ஏமன் நாட்டில் இஸ்லாம் மதத்தின் ஷரியா சட்டம் அமலில் உள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்டவரின் (தலால் அப்தோ மஹ்தி) குடும்பம் மன்னிப்பு அளித்தால், நிமிஷாவின் தண்டனை ரத்து செய்யப்படும். அந்த மன்னிப்பிற்கு ஈடாக ‘ப்ளட் மணி’ (Blood money) அல்லது தியா (Diyah) எனப்படும் நஷ்டஈடு (பெரும்பாலும் பணம்) வழங்கப்படும்.
இந்திய அரசு கூறுவது என்ன?
ஏமனில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
“இந்திய அரசு முடிந்ததைச் செய்துள்ளது” என்று அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். அரசு பல வழிகளிலும் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த முயன்றதாகவும், ஆனால் அதில் எதுவும் பலனளிக்கவில்லை என்றும் அட்டர்னி ஜெனரல் கூறினார். அரசாங்கம் தனக்குக் கிடைத்த அனைத்து வழிகளையும் பயன்படுத்தியுள்ளது என்று நீதிமன்றத்தில் அவர் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், நிமிஷாவின் தூக்கு தண்டனையை நிறுத்துவதற்கு ராஜதந்திர தலையீட்டை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் கோரியுள்ளார்.
இந்தநிலையில் இந்த வழக்கை நீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது
வழக்கின் பின்னணி
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த 35 வயதான நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார்.
அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர்.
நிமிஷா, 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு மாதம் கழித்து சௌதி அரேபியாவை ஒட்டிய ஏமன் எல்லையில் நிமிஷா கைது செய்யப்பட்டார்.
மஹ்திக்கு ‘அதிகப்படியான மயக்க மருந்து’ கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது.
மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.
ஆனால், 2020ஆம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது.