முதலில் இன்னிங்ஸை தொடங்கிய லைக்கா கோவை கிங்ஸ் தொடக்கம் முதலே சேப்பாக் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தொடக்க வீரராக களமிறங்கிய லோகேஸ்வர் 9 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய சச்சின் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். நிதானமாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் ஜித்தேஷ் குமார் 20 பந்துகளில் 42 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய சித்தார்த் 26 ரன்களுக்கும், குரு ராகவேந்திரன் 25 ரன்களுக்கும், கோவை அணியின் கேப்டன் ஷாருக்கான் 20 ரன்களுக்கும், மாதவ பிரசாத் 17 ரன்களுக்கும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். 19.4 ஓவர் முடிவில் கோவை அணி 144 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சேப்பாக் அணியில் சிறப்பாக பந்து வீசிய அபிஷேக் தன்வர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிரேம்குமார், விஜய் சங்கர் தலா 2 விக்கெட்டுகளையும், சிலம்பரசன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
