கடைசி டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி! | England win the last T20 match versus west indies

Share

சவுத்தாம்ப்டன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

சவுத்தாம்ப்டனில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 3 விக்கெட்கள் இழப்புக்கு 248 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 46 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 84 ரன்களும், ஜேமி ஸ்மித் 26 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 60 ரன்களும் விளாசினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் குவித்தது.

ஜாஸ்பட்லர் 10, கேப்டன் ஹாரி புரூக் 35, ஜேக்கப் பெத்தேல் 36 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் அகீல் ஹோசைன், குடகேஷ் மோதி, ஷெர்பேன் ரூதர்போர்டு ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

249 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 211 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ரோவ்மன் பொவல் 45 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் விளாசினார். கேப்டன் ஷாய் ஹோப் 45, ஷிம்ரன் ஹெட்மயர் 26, ஜேசன் ஹோல்டர் 25 ரன்கள் சேர்த்தனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் லூக் வுட் 3, ஆதில் ரஷித் 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.

முதல் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி கண்டிருந்தது. ஆட்ட நாயகனாக பென் டக்கெட்டும், தொடர் நாயகனாக ஜாஸ் பட்லரும் தேர்வானார்கள். ஒருநாள் போட்டி தொடரை முழுமையாக இழந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி தற்போது டி 20 தொடரையும் பறிகொடுத்துள்ளது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com