பெங்களூரு நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: ஆர்சிபி அறிவிப்பு | Rs.10 lakhs to each of the victims families: RCB

Share

பெங்களூரு: பெங்களூரு நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு தரப்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என ஆர்சிபி அணி நிர்வாகம் இன்று (ஜூன் 5) அறிவித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் உதவிக்காக ‘ஆர்சிபி கேர்ஸ்’ என்ற நிதி தொகுப்பு உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆர்சிபி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நேற்று பெங்களூருவில் நடந்த துரதிருஷ்டவசமான சம்பவம் ஆர்சிபி குடும்பத்துக்கு மிகுந்த வேதனையைத் தந்துள்ளது. இந்தத் தருணத்தில் மரியாதை நிமித்தமாகவும், பாதிக்கப்பட்டோருக்கு துணை நிற்கும் வகையிலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சார்பில் வழங்கப்படும்.

காயமடைந்தவர்களுக்கு உதவும் வகையில் ‘RCB Cares’ என்ற பெயரில் நிதித் தொகுப்பும் உருவாக்கப்படும். அதன் மூலம் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். நாங்கள் முன்னெடுக்கும் எல்லா காரியங்களிலும் எங்களின் ரசிகர்களே பிரதானமாக இருப்பார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தச் சோதனையான நேரத்தில் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னிப்பு கேட்ட பிசிசிஐ செயலாளர்: முன்னதாக, நேற்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா, “எனக்கு மிகுந்த அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் முறையாக திட்டமிடவில்லை. இதற்காக பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது தவறான முன்னுதாரணம் ஆகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com