பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல் 2025 கோப்பையை முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதையடுத்து, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வீரர்களை கௌரவிக்க அரசு சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டிருந்தனர்.
அப்போது மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மைதானத்தின் வாயில்கள் திறக்கப்படாமல் இருந்ததாகவும் சிறிய நுழைவாயில் வழியாக பலரும் உள்ளே நுழைய முயன்றதால் நெரிசல் ஏற்பட்டதாகவும் பிபிசியிடம் பேசிய காவல்துறை அதிகாரி குறிப்பிட்டார்.
மற்றொரு அதிகாரி பிபிசியிடம் பேசும்போது, “ஒரு லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் மைதானத்தைச் சுற்றி திரண்டனர்” என்றார்.
பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE/AFP via Getty Images
அங்கிருந்து வெளியான புகைப்படங்களில், ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்துவதையும் காண முடிந்தது.
இது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டங்களைக் காணவிருந்த மக்கள் இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தது மிகவும் வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆர்சிபியின் வெற்றி குறித்து பெருமைப்படுகிறோம், ஆனால் அது யாருடைய உயிரையும் விட பெரிதாக இருக்க முடியாது. அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் டி.கே. சிவகுமார், “லட்சக்கணக்கான மக்கள் கூடியதால் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. காவல் ஆணையர் மற்றும் அனைவரிடமும் பேசியுள்ளேன். நான் சற்று நேரம் கழித்து மருத்துவமனைக்குச் செல்வேன். இப்போதைக்கு நோயாளிகளைப் பராமரிக்கும் மருத்துவர்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை.” என்றார்.
மேலும், “மக்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எல்லாவற்றையும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கிறோம்.” என்றார் துணை முதல்வர் டி.கே. சிவகுமார்.
நேற்று ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கோப்பையை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 18 வருடங்களில் முதல்முறையாக பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளதால் அதை ஆர்சிபி அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
விராட் கோலி உள்ளிட்ட பெங்களூர் அணியின் வீரர்கள் கோப்பையுடன் இன்று (ஜூன் 4) மதியம் பெங்களூர் வந்தடைந்தனர். அவர்களை கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார்.
பட மூலாதாரம், ANI
அதைத் தொடர்ந்து, கோப்பையை ஏந்தியபடி விராட் கோலி பேருந்தில் முன்னே அமர்ந்திருக்க, பெங்களூரு வீரர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ரசிகர்கள், அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
ஆர்சிபி வீரர்களின் அணிவகுப்பு ரத்து
ஆர்சிபி அணி பழைய எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு சிறப்பு விமானம் மூலம் வந்தது, அங்கு அவர்களை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வரவேற்று ஊர்வலமாக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.
வரவேற்பு விழாவிற்கு முன்பு, ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா மற்றும் பிற அமைச்சர்கள் அணியை வரவேற்றனர். இதன் பிறகு, அணி மீண்டும் ஊர்வலமாக மைதானத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.
இதற்கிடையில், மழை பெய்யத் தொடங்கியது, பின்னர் நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக, அணி மீண்டும் ஹோட்டலுக்குத் திரும்பியது.
நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆர்சிபி வீரர் விராட் கோலியின் 18-ஆம் எண் பொறித்த ஜெர்சிகளை அணிந்திருந்த மக்கள் தங்கள் வாகனங்களில் மைதானத்தை நோக்கி நகர்ந்தனர். மெட்ரோ ரயில்கள் மிகவும் கூட்டமாக இருந்ததால் பலர் மெட்ரோவில் ஏற முடியவில்லை. எங்கும் ‘ஆர்சிபி… ஆர்சிபி…’ என்று முழக்கத்தை கேட்க முடிந்தது.
பெரும்பாலான ஆட்டோரிக்ஷாக்கள் மற்றும் டாக்சிகள் மைதானத்திற்கு அருகில் செல்ல மறுத்தனர். அப்படி அங்கே செல்ல முன்வந்த ஒரு சிலரும், பயணிகளிடம் அதிக பணம் வசூலித்ததுடன், மைதானத்திற்கு மூன்று கிலோமீட்டர் முன்பே பயணிகளை இறக்கிவிட்டனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் உயிரிழந்த செய்தி பரவியவுடன், மக்கள் மெட்ரோ நிலையத்தை நோக்கி விரையத் தொடங்கினர். இதனால், மெட்ரோ அதிகாரிகள் மைதானத்தைச் சுற்றியுள்ள நிலையத்தை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
ஆர்சிபி ரசிகை கூறியது என்ன?
சம்பவ இடத்தில் இருந்து பேசிய ஆர்சிபி ரசிகை ஒருவர், “உள்ளே இருக்கைகள் எல்லாம் நிரம்பிவிட்டன, அதனால்தான் எங்களை உள்ளே விடவில்லை. நாங்கள் திரும்பிச் செல்ல விரும்புகிறோம், ஆனால் நாங்கள் திரும்பிச் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.
வாயில்கள் மக்களால் நிரம்பி வழிகின்றன, காவல்துறை வாயில்களைத் திறந்தாலும், மக்கள் உள்ளே வரத் தொடங்குவார்கள். ஏற்கனவே நிறைய பேர் காயமடைந்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
மைதானத்திற்கு வெளியே கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியது தொடர்பான காணொளிகளை ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
இந்திய கிரிக்கெட் கவுன்சில் கூறியது என்ன?
பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கவுன்சில்) துணைத் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராஜீவ் சுக்லா, கூட்டம் திடீரென இப்படி அதிகரிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.
மேலும் “கூட்டம் மிக அதிகமாகிவிட்டது. இந்த நிகழ்ச்சி திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு கூட திடீரென்று இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என தெரியாது. இது திடீரென் ஏற்பட்ட விபத்து, இது அனைவருக்கும் சோகமான தருணம். உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு முடிந்தவரை உதவிகளை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என்று அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பட மூலாதாரம், Getty Images
விராட் கோலி கூறியது என்ன?
பெங்களூரு கூட்ட நெரிசலில் ஆர்.சி.பி ரசிகர்கள் பலியானது குறித்து கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆர்சிபி அணியின் பதிவை பகிர்ந்த விராட், “சொல்ல வார்த்தைகள் இல்லை. முற்றிலும் மனம் உடைந்துவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு