பட மூலாதாரம், Vedan/Instagram
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
-
கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகரான வேடனை பா.ஜ.கவும் இந்து அமைப்புகளும் கடுமையாக விமர்சித்துவருகின்றன. பா.ஜ.கவைச் சேர்ந்த தலைவர் ஒருவர், வேடனை தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். யார் இந்த வேடன்?
கடந்த சில நாட்களாக கேரளாவின் சமூக ஊடகங்களிலும் தமிழ்நாட்டின் யூடியூப் சேனல்களிலும் பரவலாக அடிபடும் பெயர் வேடன். கேரளாவைச் சேர்ந்த ராப் பாடகரான வேடனை பா.ஜ.கவும் இந்து அமைப்புகளும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்திருப்பதால், ஒரு பெரிய சர்ச்சையின் மையப்புள்ளியாக உருவெடுத்திருக்கிறார் அவர்.
வேடனை தேசிய பாதுகாப்பு முகமை விசாரிக்க வேண்டுமென உள்துறை அமைச்சகத்திற்கு பா.ஜ.கவைச் சேர்ந்த ஒருவர் கடிதம் எழுதியது தேசிய அளவில் இவர் மீது கவனத்தைத் திருப்பியிருக்கிறது.
‘வேடன்’ என்ற பெயர்
பட மூலாதாரம், Vedan/Instagram
கேரளாவின் திருச்சூரில் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்தவர் ஹிரந்தாஸ் முரளி. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, சில காலம் கட்டுமானத் தொழிலாளராக வேலை பார்த்த ஹிரந்தாஸ், ஒருகட்டத்தில் திரைப்பட இயக்குநரும் எடிட்டருமான பி. அஜீத் குமாரின் ஸ்டுடியோவில் பணியாற்ற ஆரம்பித்தார்.
இந்த காலகட்டத்தில்தான் அமெரிக்க ராப் பாடகரான ட்யுபக் ஷகூரின் தாக்கம் ஏற்பட்டதாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் வேடன். ஒரு பாடகராக உருவெடுக்க முடிவுசெய்த பிறகு, தனக்கு ‘வேடன்’ என்ற பெயரை அவர் தேர்வுசெய்துகொண்டார்.
2020ஆம் ஆண்டில், கோவிட் பெருந்தொற்று உச்சகட்டத்தில் இருந்தபோது அகில் ராமச்சந்திரன், ஹ்ரித்விக் சசிகுமார் என்பவர்களோடு இணைந்து Voice of the Voiceless என்ற தனது முதல் பாடல் வீடியோவை யூடியூபில் வெளியிட்டார் வேடன். சாதி பிரச்சனை, நிறம் சார்ந்த ஒதுக்கல், விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் போராட்டம் ஆகிவற்றை அந்தப் பாடலில் சுட்டிக்காட்டியிருந்தார்.
குறுகிய காலத்திலேயே அந்தப் பாடல் 6,00,000 பார்வைகளைக் கடந்தது. (தற்போது 13 மில்லியன் பேர் அந்தப் பாடலைப் பார்த்திருக்கின்றனர்). இதற்கடுத்ததாக Bhoomi Njan Vazhunidam என்ற பாடலை வெளியிட்டார். அதுவும் பிரபலமான நிலையில், கேரளாவில் ஒடுக்கப்பட்டோருக்கான குரல்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டார் வேடன்.
பட மூலாதாரம், Vedan/Instagram
அதே ஆண்டில் கொச்சி மியூசிக் ஃபவுண்டேஷனின் ஹிப் ஹாப் இசைத் திருவிழாவில் பங்கேற்று கவனத்தை ஈர்த்தார். இதற்குப் பிறகு அவரது இசைத் தொகுப்புகள் தொடர்ந்து வெளியாக ஆரம்பித்தன. 2021ஆம் ஆண்டில் நாயாட்டு படத்தில் “நரபலி” என்ற பாடலை எழுதிப் பாடினார் வேடன்.
இதற்குப் பிறகு மலையாளத்தில் பெரும் வெற்றிபெற்ற மஞ்சுமோல் பாய்ஸ் படத்தில் ‘குதந்திரம்’ என்ற பாடலை எழுதிப் பாடினார் வேடன். இந்தப் பாடல்கள் மிகப் பெரிய ஹிட்டாகின. டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நரிவேட்டை’ படத்தில் ‘வாடா வேடா’ என்ற பாடலையும் எழுதி பாடியிருக்கிறார் வேடன்.
கேரளாவை ஆளும் இடது ஜனநாயக முன்னணியும் (எல்டிஎஃப்) எதிர்க்கட்சியான காங்கிரசும் வேடனை ஆதரித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்து அமைப்புகள் பாடகர் வேடன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் துவங்கியுள்ளன.
தேசிய பாதுகாப்பு முகமைக்கு அனுப்பப்பட்ட கடிதம்
பட மூலாதாரம், Vedan/Instagram
2021ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று எல்டிஎஃப் மீண்டும் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கேரள அரசு பல நிகழ்வுகளை நடத்தியது. அப்படி நடத்தப்பட்ட பல நிகழ்வுகளில் வேடன் பங்கேற்றார். கடந்த மே 18ஆம் தேதியன்று பாலக்காட்டின் கோட்டை மைதானத்தில் வேடனின் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. மாநில அரசின் எஸ்.சி. – எஸ்.டி. மேம்பாட்டுத் துறை இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த இசை நிகழ்ச்சிக்கு பெருமளவில் ரசிகர்கள் திரண்டனர். இதனால் அங்கு பெரும் நெரிசல் ஏற்பட்டு சிலர் காயமடைந்தனர்.
இதையடுத்து, அந்த மைதானத்தில் சேதமடைந்த நகராட்சி சொத்துகளுக்கு மாநில எஸ்.சி. – எஸ்.டி மேம்பாட்டுத் துறை உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என பா.ஜ.கவின் கட்டுப்பாட்டில் உள்ள பாலக்காடு நகராட்சி கூறியுள்ளது.
இதற்குப் பிறகு, பாலக்காட்டைச் சேர்ந்த பா.ஜ.கவின் கவுன்சிலரான வி.எஸ். மினிமோல் என்பவர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் தேசியப் பாதுகாப்பு முகமைக்கும் (என்ஐஏ) வேடன் குறித்து கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில், வேடனின் பாடல்களில் பிரதமர் நரேந்திர மோதி குறித்து அவதூறான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகவும் சாதியை முன்வைத்து இந்து சமூகத்தைப் பிளக்க வேடன் முயல்வதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் அவரை தேசிய பாதுகாப்பு முகமை விசாரித்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும் எனவும் அவர் கோரியிருக்கிறார்.
வேடன் மீது ஏற்கனவே சில வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டியிருக்கும் மினிமோல், இருந்தபோதும் ஜாமீனில் வெளிவந்திருக்கும் வேடன் பெரிய அளவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வன்முறையையும் வெறுப்பையும் தூண்டுவதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.
வேடன் மீதான வழக்குகள்
பட மூலாதாரம், Vedan/Instagram
மினிமோல் குறிப்பிடும் சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. ஏப்ரல் 28ஆம் தேதியன்று, கொச்சியில் ஒரு ஃப்ளாட்டில் தங்கியிருந்த வேடனும் அவரது நண்பர்கள் எட்டுப் பேரும் கேரள மாநில கலால் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 6 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதற்குப் பிறகு காவல்துறை அந்த வீட்டைச் சோதனையிட்டபோது, அவரது சங்கிலியில் புலிப் பல் (அது சிறுத்தையின் பல் என்றும் குறிப்பிடப்படுகிறது) பதிக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சங்கிலி தாய்லாந்தில் வாங்கப்பட்டதாக வேடன் தெரிவித்தார்.
கஞ்சா வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட வேடனை, புலிப் பல் விவகாரத்தில் கேரள வனத் துறை அதிகாரிகள் கைதுசெய்தனர். பிறகு இந்த வழக்கிலும் வேடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த கைது விவகாரங்கள் அனைத்திலும் கேரளாவின் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளிப்படையாகவே வேடனுக்கு ஆதரவாக நின்றது.
அக்கட்சியின் மாநிலச் செயலர் எம்.வி. கோவிந்தன், வனத் துறை அவசரப்பட்டு கைதுசெய்ததாகக் குறிப்பிட்டார். அதேபோல வனத்துறை அமைச்சர் இதுபோன்ற விவகாரங்களில் பொதுமக்களின் உணர்வுகளையும் மனதில் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்தார்.
இந்து அமைப்புகள் குறிவைக்க காரணம் என்ன?
இந்து அமைப்புகள் அவரைக் குறிவைக்க, அவரது பாடல்களில் இருக்கும் அரசியல்தான் முக்கியக் காரணம் என்கிறார் கேரளாவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான எம்.ஜி. ராதாகிருஷ்ணன்.
“அவரது பாடல்கள் தீவிரமான அரசியல்தன்மை உள்ளடக்கமும் கொண்டவை. தலித்துகளின் குரலை வலுவாக வெளிப்படுத்துபவை. பிராமண மேலாதிக்கத்தைக் கேள்விக்குட்படுத்துபவை. அதனால்தான் இந்து அமைப்புகள் ஆத்திரமடைகின்றன.” என்கிறார் அவர்.
வேடன் பிரதமர் மோதி குறித்து நேரடியாக விமர்சித்திருக்கிறாரா, இல்லையா என்பது ஒருபுறமிருக்க, சாதிய அடக்குமுறை குறித்து அவர் தொடர்ந்து கேள்வியெழுப்புகிறார், அதுதான் அவர்கள் வேடனைக் குறிவைக்கக் காரணம் என்கிறார் எம்.ஜி. ராதாகிருஷ்ணன்.
இது ஒருபுறமிருக்க, பாலக்காட்டில் நடந்த இந்து ஐக்கிய வேதி கூட்டத்தில் பேசிய அதன் தலைமை டிரஸ்டி பி. சசிகலா, பட்டியல் இன மக்களின் வலுவான நாட்டுப் புற பண்பாட்டில் விழுந்த கறைதான் வேடனின் இசை எனக் குறிப்பிட்டிருக்கிறார். வேடனை சாதி தீவிரவாதி எனக் குறிப்பிட்டதற்காக கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். நடத்திவரும் இதழான கேசரியின் ஆசிரியர் என்.ஆர். மது மீது கொல்லம் நகரக் காவல்துறை மே 17ஆம் தேதி வழக்குப் பதிவுசெய்துள்ளது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு