இது வேலைக்காகாது என உமேஷை ஸ்ரேயாஸ் கொண்டுவர, வார்னரது கதையை உமேஷின் பவுன்சர் முடிக்க, பார்ட்னர்ஷிப் உடைந்தது. 26 பந்துகளில் 42 ரன்களோடு வெளுத்து வாங்கியிருந்தார் வார்னர். செட்டில் ஆன இன்னொரு பேட்ஸ்மேனையும் நரைனைக் கொண்டு வந்து கேகேஆர் அனுப்பியது. உமேஷுக்கு இன்னுமொரு ஓவரும் கொடுக்கப்பட, ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து பேக் ஆஃப் தி லெந்த்தில் வீசப்பட்ட பந்தில் பண்ட்டின் விக்கெட்டும் பறிபோனது. இந்திய டி20 அணியின் நிரந்தர வீரர்களில் சிலர், இந்த ஐபிஎல்லில் சோபிக்காமல் சொதப்புவது ரசிகர்களிடையே சற்றே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்ததாக பவலுடன் இணைந்து அக்ஸர் படேல் தனது ஆல் ரவுண்டிங் திறமையை நிருபித்துக் கொண்டிருக்க, 15-வது ஓவரில் தேவையில்லாத அவரது ரன் அவுட் திடீர் திருப்புமுனையானது. எனினும் அது வெறும் வளைவே டெத் எண்டல்ல என்பதனை பவல் – தாக்கூர் கூட்டணியும், 30 பந்துகளில் வெறும் 37 ரன்களே தேவை என்பதும் நிருபித்தன. மூழ்க இருந்த டெல்லியை நீர்மூழ்கிக் கப்பலாக மாற்றி இந்த பார்ட்னர்ஷிப்கள் ஏற்கெனவே கரைசேர்த்திருந்தன.
இறுதியாக, ஸ்ரேயாஸின் அட்டகாசமான கேப்டன்ஷிப் நகர்வுகளோ, 19-வது ஓவரில் பந்து வீசும் அவரது துணிகர முடிவோ… எதுவுமே காப்பாற்றவில்லை. போன போட்டியில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்த பவல், முழுமையான ஃபினிஷர் அரிதாரத்தை மீண்டும் பூசி, சிக்ஸரோடு இலக்கை எட்டினார், பவல். ஆறு பந்துகள் மீதமிருக்க, நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று புள்ளிப் பட்டியலில் ஓரடி முன்னேறியது டெல்லி.
பவர்பிளே பற்றாக்குறைகள், பேட்டிங் பரிதாபங்கள், எட்டுப் பேர் பந்து வீசியும் தீராத அவர்களது பந்து வீச்சு பலவீனம் என எல்லாமே சேர்ந்து மறுபடியும் ஒரு தோல்வியை கொல்கத்தாவின் கணக்கில் சேர்த்து விட்டது. தொடர்ச்சியான தோல்விகள் அவர்களை பலவீனப்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு தோல்வியும் தொடரை விட்டு அவர்களை வெளியேற்றிக் கொண்டிருக்கும் அடிகள் என்பதே உண்மை.