பிரெஞ்சு ஓபன் இன்று தொடக்கம்! | french open 2025 tennis grand slam tournament begins today

Share

பாரிஸ்: கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இன்று தொடங்குகிறது. வரும் ஜூன் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் பட்டம் வெல்வதற்கு உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் மல்லுக்கட்ட உள்ளனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 22 வயதான அல்கராஸ் இந்த ஆண்டில் களிமண் தரை ஆடுகளத்தில் நடைபெற்றுள்ள 16 ஆட்டங்களில் 15-ல் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் சவால்தரக்கூடும்.

கடந்த 18 மாதங்களாக டென்னிஸ் உலகில் ஜன்னிக் சின்னர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ஊக்க மருந்து விவகாரத்தில் 3 மாத தடைகாலத்துக்கு பின்னர் சமீபத்தில் அவர், களத்துக்கு திரும்பியிருந்தார். சமீபத்தில் முடிவடைந்த இத்தாலி ஓபன் தொடரின் கால் இறுதியில் சின்னர், 2 முறை பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த நார்வேயின் காஸ்பர் ரூடை தோற்கடித்து இருந்தார். ஆனால் இறுதிப் போட்டியில் அல்கராஸிடம் வீழ்ந்தார். அநேகமாக இம்முறை பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் இவர்கள் நேருக்கு நேர் மோதக்கூடும்.

இது ஒருபுறம் இருக்க 38 வயதான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 25 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார். சமீபத்தில் அவர், ஜெனீவா ஓபனில் இறுதிப் போட்டியில் கால்பதித்து இருந்தார். ஏற்கெனவே 3 முறை பிரெஞ்சு ஓபனில் வாகை சூடியுள்ள ஜோகோவிச் தனது அனுபவத்தால் இளம் வீரர்களுக்கு நெக்கடி கொடுக்கக்கூடும்.

இங்கிலாந்தின் ஜேக் டிராப்பர், நார்வேயின் காஸ்பர் ரூடு, ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவ், இத்தாலியின் லாரேன்ஸோ முசெட்டி ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.

மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக் களமிறங்குகிறார். பெலாரஸின் அரினா சபலென்கா, ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் கோ கோ காஃப், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, லத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோ ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com