மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வீரர் அபிஷேக் போரல் அவுட் சர்ச்சை: நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் | Abhishek porel dismissal against Mumbai Indians sparks controversy

Share

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 63-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. இதில் 59 ரன்களில் வெற்றி பெற்ற மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் டெல்லி வீரர் அபிஷேக் போரல் அவுட்டானது சர்ச்சையாகி உள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் ரியாக்‌ஷனை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்த ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பும், டெல்லி அணி தோற்றால் முதல் சுற்றோடு தொடரை நிறைவு செய்யும் நிலையும் இருந்தது. இதில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 180 ரன்கள் எடுத்தது. 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை டெல்லி அணி விரட்டியது. அந்த அணி 18.2 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 11-வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கெனவே 5 முறை ஐபிஎல் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இப்போது ஆறாவது முறையாக பட்டம் வெல்வதற்கான வாய்ப்பு கூடி வந்துள்ளதாக அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அபிஷேக் போரல் அவுட் சர்ச்சை: இரண்டாவது இன்னிங்ஸில் டெல்லி அணி பேட் செய்த போது 5-வது ஓவரை மும்பை தரப்பில் வில் ஜேக்ஸ் வீசினார். ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்த காரணத்தால் அந்த முடிவை கையிலெடுத்தார் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா.

அந்த ஓவரில் 2-வது பந்தை அபிஷேக் போரல் எதிர்கொண்டார். அந்த பந்தை ஆட முயன்று மிஸ் செய்தார். பந்தை பிடித்த மும்பை விக்கெட் கீப்பர் ரிக்கல்டன் ஸ்டம்பிங் செய்தார். நீண்ட நேரம் எடுத்துக் கொண்ட பிறகே மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால், அபிஷேக் போரலின் கால்கள் கிரீஸுக்கு உள்ளே இருப்பதாக ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அபிஷேக் அவுட் விவகாரத்தில் சில வீடியோ காட்சிகளில் அவரது கால்கள் மேல் பக்கம் தூக்கி இருந்தது போல இருந்தது. சில வீடியோ காட்சிகளில் அவரது கால்கள் கிரீஸ் லைனுக்கு உள்ளே தரையில் இருந்தது தெளிவாக தெரிந்தது. அதை தான் இப்போது நெட்டிசன்கள் தங்கள் பதிவுகளில் சுட்டிக்காட்டி வருகின்றனர். ‘மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் என்றால் விசித்திரமான விஷயங்கள் நிகழும்’ என எக்ஸ் தளத்தில் ஒருவர் தெரிவித்துள்ளார். ‘அது அவுட்டே இல்லை. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது’ என மற்றொரு சமூக வலைதள பயனர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com