நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி முதல் எல்.எஸ்.ஜி வரையில் டாப் 6 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் இருக்கின்றன.
கடைசி 4 இடங்களில் அணிகளான கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை ஆகியவை ஒவ்வொரு ஆட்டத்தையும் வாழ்வா சாவா என ஆடும் நிலையில் இருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு போட்டியாகத்தான், டெல்லியை அதன் சொந்த மைதானத்தில் இன்று (ஏப்ரல் 29) எதிர்கொண்டது கொல்கத்தா.
டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல், இந்த சீசனில் பெரும்பாலான கேப்டன்கள் டாஸ் வென்று தேர்வு செய்யும் பந்துவீச்சையே தேர்வு செய்தார்.

டெல்லியைப் பந்தாடிய கொல்கத்தா டாப் ஆர்டர்!
இந்தப் போட்டியில் ஜெயிக்க அதிரடி பேட்டிங் முக்கியம் என நரைனும், குர்பாஸும் களமிறங்கினார். அந்த இன்டென்ட்டை ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தையும் கடைசி பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பி வெளிப்படுத்தினார் குர்பாஸ்.
2-வது ஓவரை சிக்ஸ், ஃபோர் என சுனில் நரைன் அதிரடி காட்ட, 3-வது ஓவரில் முதல் நான்கு பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்த குர்பாஸ், ஸ்டார்க்கின் ஐந்தாவது பந்தில் கேட்ச் அவுட்டனர்.

12 பந்துகளில் 5 பவுண்டரி, ஓரு சிக்ஸ் என 26 ரன்கள் அடித்து கொல்கத்தாவுக்கு நல்ல மொமென்ட்டம் ஏற்படுத்திக் கொடுத்தார் குர்பாஸ்.
அடுத்து வந்த கேப்டன் ரஹானேவும் இந்த நல்ல தொடக்கத்தை சரியாகப் பயன்படுத்தி, நரைனின் கூடுதல் அதிரடியுடன் பவர்பிளேயின் கடைசி மூன்று ஓவர்களில் 31 சேர்க்க, பவர்பிளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் குவித்தது கொல்கத்தா.