பட மூலாதாரம், JP GUPTA
ஒவ்வொரு வாரமும், தனது மகன் தொலைபேசியில் அழுவதை கேட்கும் போது ஜேபி குப்தாவின் மனம் உடைந்துபோகிறது.
இந்த வாராந்திர தொலைபேசி அழைப்பு நிகழ்வு ஜனவரியில், கத்தாரில் இருக்கும் இந்திய மூத்த தொழில்நுட்ப அதிகாரியான அமித் குப்தா இதுவரை வெளியிடப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பின்னர் தொடங்கியது.
அதன் பின் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்னவென்பது தங்களுக்கு தெரியாது என இந்தியாவில் இருக்கும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
“அவர் எங்களுடன் ஐந்து நிமிடங்கள்( ஒரு வாரத்தில்) மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறார். அப்போது அவர் சொல்வதெல்லாம்: அப்பா நான் தவறாக எதும் செய்யவில்லை என்பது மட்டும்தான். அதன் பின்னர் அவர் உடைந்துபோய் அழுகிறார்” என்கிறார் அவரது தந்தை.
“காரணம் கூறாமல் கைது”
இந்திய தொழில்நுட்ப நிறுவனமான டெக் மஹிந்திராவின் குவைத் மற்றும் கத்தார் நாட்டு தலைவராக இருப்பவர் அமித் குப்தா. அவர் கத்தார் தலைநகர் தோஹாவிற்கு 2013ஆம் ஆண்டு பணி நிமித்தமாக குடிபெயர்ந்தார்.
அவர் கத்தார் நாட்டு பாதுகாப்புத் துறையால் அவரது அலுவலகத்தின் அருகே உள்ள உணவகம் ஒன்றிலிருந்து ஜனவரி ஒன்றாம் தேதி எந்த காரணமும் கூறாமல் கைது செய்யப்பட்டதாக அவர் தந்தை பிபிசியிடம் தெரிவித்தார்.
அமித் குப்தா ஏன் கைது செய்யப்பட்டுள்ளார் என பிபிசி கேட்ட கேள்விக்கு கத்தார் உள்துறை அமைச்சகம் பதில் ஏதும் அளிக்கவில்லை.
இது குறித்து டெக் மஹிந்திராவின் கருத்தை பிபிசி கேட்டது. நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், நிறுவனம் குடும்பத்துடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான ஆதரவை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
“இரண்டு நாடுகளிலும் உள்ள அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகிறோம் என்பதுடன் முறையான நடைமுறைகளை பின்பற்றுகிறோம். எங்களது சகாவின் நலத்தை உறுதி செய்வது எங்களது முதல் நோக்கமாக இருக்கிறது,” என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய தூதரகம் என்ன சொல்கிறது?
பட மூலாதாரம், Getty Images
இந்திய மென்பொருள் சேவை மற்றும் ஆலோசனை நிறுவனமான டெக் மஹிந்திரா கத்தார் உட்பட் 90 நாடுகளில் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதுடன் 138,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டது.
அமித் குப்தாவின் வழக்கு தொடர்பாக இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் கத்தாரில் இருக்கும் இந்திய தூதரகம் வழக்கை நெருக்கமாக பின்தொடர்ந்து வருவதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.
“குடும்பத்தினர், அமித் குப்தாவின் சார்பில் செயல்படும் வழக்கறிஞர் மற்றும் கத்தார் அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பில் இருக்கிறது,” என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் தூதரகம் அனைத்து சாத்தியமான உதவிகளையும் வழங்குகிறது எனவும் அவர்கள் கூறினர்.
ஆனால் தனது கணவரின் விடுதலையை உறுதி செய்ய அரசு மேலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என அமித் குப்தாவின் மனைவி ஆகான்ஷ்சா கோயல் தெரிவித்தார்.
தனது கணவர் “தீவிர மன அழுத்தத்தில் இருப்பதாக” பிரதமர் நரேந்திர மோதியின் அலுவலகத்திற்கு அவர் ஒரு கடிதம் எழுதினார்.
“தோஹாவில் இருக்கும் தொடர்புடைய அதிகாரிகளிடம் மீண்டும் மீண்டும் வைத்த கோரிக்கைகள் எந்த நேர்மறையான பதிலையும் தரவில்லை,” என அவர் எழுதியுள்ளார்.
இந்த கடிதம் பிப்ரவரி 18ஆம் தேதி பெற்றுக்கொள்ளப்பட்டு வெளியுறவுத் துறைக்கு அனுப்பப்பட்டது, ஆனால் அது முதல் ஏதும் நடைபெறவில்லை என கோயல் பிபிசியிடம் தெரிவித்தார்.
“பிரதமர் நரேந்திர மோதி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அவர்கள் தலையிடும்வரை எதும் நடைபெறும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை,” என அவர் தெரிவித்தார்.
விசாரிக்காமலே சிறையா?
பிப்ரவரி மாதத்தில், அமித் குப்தாவின் பெற்றோர் தோஹாவிற்கு சென்று அங்கிருக்கும் இந்திய தூதரகத்தின் உதவியுடன் அவரை சந்தித்தனர்.
“அவரைப் பார்த்த போது, அவர் எங்களை கட்டிப்பிடித்து அழுதார். அவர் ஏதும் தவறு செய்யவில்லை என திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்,” என அவரது தந்தை தெரிவித்தார். கத்தாரில் விசாரணை அதிகாரிகள் தனது மகனை இன்னமும் விசாரிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
“அவருக்கு எதிராக அவர்கள் எதையும் கண்டுபிடித்திருக்காவிட்டால், அவர் விடுவிக்கப்படவேண்டும்,” என அவர் தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கத்தாரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். 2022ஆம் ஆண்டு முதல் உயர்நிலை பொறுப்பில் இருக்கும் இந்தியரின் கைது தலைப்பு செய்தியில் இடம்பெறுவது இது இரண்டாவது முறை.
மீண்டும் தூதரக உறவு பலன் தருமா?
கடந்த வருடம், கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு முன்னாள் கடற்படை அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். கத்தாரில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு பணியாற்றி வந்த அவர்கள் மீதான குற்றச்சாட்டு என்னவென்பதை கத்தாரோ, இந்தியாவோ வெளியிடவில்லை. ஆனால் அந்த நபர்கள் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த அதிகாரிகளுக்கான மரண தண்டனை நிறுத்தப்பட்டது மோதி அரசின் தூதரக நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டது. மோதியின் நிர்வாகம் கத்தாருடன் நல்ல உறவுகளை பராமரித்து வருகிறது. பிப்ரவரியில், கத்தாரின் எமிர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி உயர் நிலை குழு ஒன்றுடன் இந்தியாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது இரண்டு நாடுகளும் தங்கள் உறவை ஒரு உத்தி ரீதியிலான கூட்டாக உயர்த்தினர்.
அமித் குப்தாவின் குடும்பம் கவலையுடன் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், தங்களது 11 வயது மற்றும் 4 வயது குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தவிப்பதாக கூறுகிறார் கோயல்.
தங்கள் தந்தைக்கு என்ன நேர்ந்தது என எங்கள் குழந்தைகள் என்னை கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். எனது மகனின் பிறந்தநாள் ஏப்ரல் மாதத்தில் வருகிறது. அப்போது எப்போதும்போல் அமித் இருக்கவேண்டும் என அவர் எதிர்பார்க்கிறான்,” என்கிறார் அவர்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு