மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், கடந்த டிசம்பர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் 1,78,000 பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். இதில், 60 சதவிகிதம் பேர் 18-லிருந்து 34 வயதுடையவர்கள். மேலும், அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் முதல் நான்கு இடங்களில், உத்தரப்பிரதேசம் (23,652), தமிழ்நாடு (18,347), மகாராஷ்டிரா (15,366), மத்தியப்பிரதேசம் (13,798) ஆகியவை இருக்கின்றன.

அந்தக் கூட்டத்தொடரில் பேசிய துறை சார்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பதை மறந்து விடுங்கள். சாலை விபத்துகள் அதிகரித்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்தப் பகுதியானது எங்கள் துறை வெற்றி பெறாத ஒரு பகுதியாகும்.” என்று கூறியிருந்தார். இந்த நிலையில், நாட்டின் சாலை விபத்துகளுக்கு முக்கியமான குற்றவாளிகள் சிவில் இன்ஜினியர்கள்தான் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தற்போது கூறியிருக்கிறார்.