சென்னை: இந்திய கால்பந்து அணிக்காக மீண்டும் களம் காண உள்ளார் சுனில் சேத்ரி. இதற்காக அவர் ஓய்வுக்கு விடை கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் குவைத் உடனான போட்டிக்கு பிறகு அவர் ஓய்வு பெற்றார்.
இந்திய கால்பந்து அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் (151 போட்டிகள்) மற்றும் அதிக கோல்கள் (94 கோல்கள்) பதிவு செய்த வீரராக சுனில் சேத்ரி திகழ்கிறார். 40 வயதான அவர், கடந்த 2005-ல் இந்திய சீனியர் கால்பந்து அணியில் விளையாடத் தொடங்கினார். இந்தச் சூழலில் சர்வதேச போட்டிகளில் கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்தார். தற்போது அதற்கு விடை கொடுத்துள்ளார்.
இந்த மாதம் இறுதியில் மாலத்தீவு மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டிகளில் அவர் தேசத்துக்காக மீண்டும் விளையாட உள்ளார். சர்வதேச அளவில் அதிக கோல்கள் பதிவு செய்த வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் அவர் உள்ளார். முதல் இடத்தில் ரொனால்டோ உள்ளார்.
ஓய்வுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் பெங்களூரு எஃப்சி அணிக்காக சுனில் சேத்ரி விளையாடி வருகிறார். நடப்பு சீசனில் 12 கோல்களை பதிவு செய்துள்ளார். இந்திய வீரர்களில் அதிக கோல்களை பதிவு செய்தவராக உள்ளார்.
“எனது ஓய்வு முடிவு உடல் சார்ந்தது அல்ல. நான் இன்னும் ஃபிட்டாக இருக்கிறேன். நன்றாக ஓடுகிறேன், பந்தை சேஸ் செய்கிறேன், டிபென்ட் செய்கிறேன். கடினமாக உழைப்பது எனக்கு சிக்கல் அல்ல. ஓய்வுக்கான காரணம் மன ரீதியானது” என சுனில் சேத்ரி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் தற்போது மீண்டும் அணிக்கு திரும்புகிறார்.