பார்டர் கவாஸ்கர் தொடரின் பாக்சிங் டே டெஸ்ட்டில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இதன்மூலம் இந்தத் தொடரை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்திருக்கிறது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பும் குறைந்திருக்கிறது. இந்நிலையில், இந்தத் தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் தன் மீதே தான் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்தார்

போட்டிக்குப் பிறகு பேசிய ரோஹித், “இந்தத் தோல்வி ஏமாற்றத்தைத்தான் கொடுக்கிறது. நாங்களால் கடைசி வரை போராட நினைத்தோம். ஆனால், எங்களால் முடியவில்லை. கடைசி இரண்டு செஷன்களில் மட்டுமில்லை, இந்தப் போட்டி முழுவதுமே எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆஸ்திரேலியாவை கம்பேக் கொடுக்க அனுமதித்து விட்டோம். எங்களால் இயன்ற அத்தனையையும் செய்து பார்த்துவிட்டோம். இன்று காலைகூட டார்க்கெட்டை நோக்கி முன்னேறுவதுதான் எங்களுடைய ஒரே எண்ணமாக இருந்தது. ஆனால், அதற்கான அடித்தளத்தை நாங்கள் சரியாக அமைக்கவில்லை.
பும்ரா புத்திக்கூர்மைமிக்கவர், அசாதாரணமானவர். நீண்ட காலமாக அணிக்கு தேவைப்படும் விஷயங்களை செய்து கொடுத்து வருகிறார். அவர் புள்ளி விவரங்களின் மீது நம்பிக்கை இல்லாதவர். அணிக்காக எதாவது செய்ய வேண்டும் என்கிற விருப்பத்தின் பேரில் இயங்குபவர். இன்னொரு முனையிலிருந்தும் அவருக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும்.” என்றார்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய ரோஹித், “கடந்த காலங்களில் நடந்ததைப் பற்றி மீண்டும் யோசிக்க விரும்பவில்லை. ஒரு கேப்டனாகவும் பேட்டராகவும் என்னுடைய செயல்பாடுகளில் நானே அதிருப்தியாகத்தான் இருக்கிறேன். இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கிறது. அந்த போட்டியில் சிறப்பாக ஆடி வென்றால் தொடரை டிரா செய்யலாம். அதுவும் நன்றாகத்தான் இருக்கும்.” என்றார்.