மெல்பர்ன்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடியதாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்-க்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.” என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை இரவு 8.06 மணிக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். என்றாலும் சிகிச்சை பலனின்றி இரவு 9.51 மணிக்கு உயிரிழந்தார்.
2004 முதல் 2014 வரை இந்திய நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், அந்த ஆண்டு தொடக்கத்தில் ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தியாவின் ஒரே சீக்கிய பிரதமராக இருந்த மன்மோகன், நரசிம்ம ராவ் அமைச்சரவையில் 1991-ல் நிதியமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
அவரது மறைவைத் தொடர்ந்து இன்று காலை முதல் ஏராளமான தலைவர்கள் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதபோல், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மன்மோகன் சிங்கின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.