‘பும்ராவை எதிர்கொள்ள திட்டம் தயார்’ – சொல்கிறார் ஆஸி. இளம் பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ் | ready to face Bumrah says young australia batsman Sam konstas

Share

Last Updated : 24 Dec, 2024 08:10 AM

Published : 24 Dec 2024 08:10 AM
Last Updated : 24 Dec 2024 08:10 AM

மெல்பர்ன்: மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் பும்ராவை எதிர்கொள்ள திட்டம் தயாராக உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 26-ம் தேதி மெல்பர்ன் நகரில் தொடங்குகிறது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ள இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரராக 19 வயதான சாம் கான்ஸ்டாஸ் அறிமுக வீரராக களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம் கான்ஸ்டாஸின் பேட்டிங், ஷேன் வாட்சனைப் நினைவூட்டும் வகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் இந்தியா ஏ அணிக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை சாம் கான்ஸ்டாஸ் வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து இந்திய அணிக்கு எதிரான பகலிரவு பயிற்சி டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் சாம் கான்ஸ்டாஸ் கூறியதாவது: ஜஸ்பிரீத் பும்ராவின் பந்தை எதிர்கொள்வதற்கு திட்டம் வைத்துள்ளேன். ஆனால் இது என்னவென்று கூறமாட்டேன். பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி செய்வேன். இந்த வயதில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது ஆச்சர்யமாக இருக்கிறது. இதன் மூலம் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற என்னுடைய கனவு நிறைவேற உள்ளது.

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை காண்பதற்கு எனது பெற்றோர் மைதானத்துக்குவர உள்ளார்கள். அது எனக்கு சிறப்பான நாளாக இருக்கும். எனது பெற்றோர் நான், விளையாடுவதற்காக பெரிய அளவில் தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கு, எதையாவது திருப்பி கொடுத்தால் சிறப்பானதாக இருக்கும். மெல்பர்ன் ஆடுகளம் நான் இதற்கு முன்னர் விளையாடிய ஆடுகளத்தை விட தற்போது வித்தியாசமாக உள்ளது. ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானதாக இருக்கும்.

எனினும் அரங்கு நிறைந்த மெல்பர்ன் மைதானத்தில் பாக்ஸிங் டே டெஸ்ட்டில் விளையாட வேண்டும் என்ற எனது கனவு தற்போது நிறைவேற உள்ளது. ஷேன் வாட்சனிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க விரும்புகிறேன். வாட்சன் ஒரு ஜாம்பவான், எனது அறிமுக போட்டியில் அவரை போன்று சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன். இவ்வாறு சாம் கான்ஸ்டாஸ் கூறினார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய நேதன் மெக்ஸ்வீனியும், பும்ரா பந்துவீச்சுக்கு எதிராக இதேபோன்றே கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் அவரது பந்து வீச்சில் 4 முறை ஆட்டமிழந்தார். இதன் காரணமாகவே மெக்ஸ்வீனி கடைசி இரு டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது இடத்துக்குதான் தற்போது சாம் கான்ஸ்டாஸ் கொண்டுவரப்பட்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் கான்ஸ்டாஸ் இன்-ஸ்விங் பந்துகளுக்கு ஸ்டெம்புகள் சிதற பல முறை ஆட்டமிழந்துள்ளார். இதனால் பும்ராவின் பந்துவீச்சு அவருக்கு கடும் சவாலாகவே இருக்கக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!


நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com