மெல்பர்ன்: வரும் 26-ம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்நிலையில், இதில் காயம் காரணமாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஆலன் பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
இதையடுத்து பிரிஸ்பனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டி மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் டிராவில் முடிவடைந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 1-1 என சமநிலை வகிக்கிறது. 4-வது டெஸ்ட் வரும் 26-ம் தேதி மெல்பர்ன் நகரில் தொடங்குகிறது.
இந்தப் போட்டிக்கு சிறப்பாக தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், கில், கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டனர். முன்னதாக, இந்திய வீரர்கள் ஃபீல்டிங் பயிற்சியும் மேற்கொண்டனர்.
கேப்டன் ரோஹித் சர்மா த்ரோ டவுன் பயிற்சி மேற்கொண்ட போது அவரது இடது கால் மூட்டு பகுதியில் பந்து தாக்கிய காரணத்தால் பயிற்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் நீண்ட நேரம் நாற்காலியில் காலினை நீட்டியபடி அமர்ந்திருந்தார். பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்கெலுடன் உடன் சிறிது நேரம் உரையாடினார். மூட்டு பகுதியில் அவர் ஐஸ் பேக் வைத்ததாகவும் தகவல்.
இதே போல ஆகாஷ் தீப் பயிற்சியில் ஈடுபட்ட போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை. பயிற்சியில் இது இயல்பான ஒன்றுதான் என அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். பயிற்சியின் போது ரோஹித் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோருக்கு ஏற்பட்ட காயம் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.