திருப்பூர்: சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்; மாணவி உள்பட மூவர் சடலமாக மீட்பு; நடந்தது என்ன? | Tirupur Birthday celebration ends in tragedy Three bodies including a student, were recovered

Share

பதினொன்றாவது படிக்கும் தனது மகள் பள்ளியிலிருந்து வீடு திரும்பவில்லை எனத் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவியைத் தேடி வந்தனர். இந்நிலையில், உடுமலைப்பேட்டை – மூணாறு செல்லும் சாலையில் மானுப்பட்டி என்ற பகுதியிலுள்ள குளத்தில் மூவரின் சடலம் மிதப்பதாகத் தளி காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்குச் சென்ற தளி காவல்துறை மூவரின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், சடலமாகக் கிடந்த மூவரில் பள்ளி மாணவியும் ஒருவர் என்பதும் மற்றொருவர் ஐ.டி.ஐ படிக்கும் குறிச்சிக்கோட்டையைச் சேர்ந்த மாணவர் மாரிமுத்து (20) என்பதும் தெரியவந்தது. மற்றொருவரின் அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து, பள்ளி மாணவியின் தோழிகள் மற்றும் மாரிமுத்துவின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

மாரிமுத்து, ஆகாஷ்

மாரிமுத்து, ஆகாஷ்

அதில், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (20). இவர் இணையதள சேவை வழங்கும் பணியைச் செய்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு குறிச்சிக்கோட்டையைச் சேர்ந்த மாணவியின் நண்பரான மாரிமுத்து (20) என்பவர் உதவியாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதி மாணவிக்குப் பிறந்த நாள் வந்துள்ளது. அதைக் கொண்டாடுவதற்காகச் சென்னையிலிருந்து உடுமலைப்பேட்டைக்கு ஆகாஷ் வந்துள்ளார். அந்த மாணவியுடன் சேர்ந்து ஆகாஷ், மாரியப்பன் மற்றும் நண்பர்கள் சிலர் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளனர். பின்னர் ஆகாஷ், மாரியப்பன், அந்த மாணவி மூவரும் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளனர்.

இருசக்கர வாகனம்

இருசக்கர வாகனம்

உடுமலை – மூணாறு சாலையில் மானுப்பட்டி அருகே வளைவில் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரத்திலிருந்த குளத்துக்குள் விழுந்துள்ளது. இதில், மாணவி உள்பட மூன்று பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், குளத்திலிருந்து அவர்கள் சென்ற இருசக்கர வாகனமும் எடுக்கப்பட்டது. இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிறந்த நாளிலே குளத்தில் மூழ்கி மாணவி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com