21-ம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்! | Pakistan victory over South Africa – A record in 21-st century Asian cricket

Share

தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கு ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது. 3-வது போட்டி நாளை (டிச.22) நடைபெறும் நிலையில், 21-ம் நூற்றாண்டில் எந்த அணியும் செய்யாத ஒரு சாதனையை பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்க மண்ணில் செய்துள்ளது.

கேப்டவுனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் பாபர் அசாம் (73), கேப்டன் ரிஸ்வான் (80), கம்ரன் குலாம் (63) என்று 329 ரன்களைக் குவிக்க, தென் ஆப்பிரிக்க அணியின் ஹென்ரிச் கிளாசன் 97 ரன்களை விளாசியும் பயனில்லாமல், டேவிட் மில்லர் 29 ரன்களில் வெளியேற 43.1 ஓவர்களில் 248 ரன்களுக்குச் சுருண்டு தொடரை இழந்தது.

மீண்டும் பவுலிங் பார்முக்கு வந்துள்ள ஷாஹின் ஷா அஃப்ரீடி 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த ஒரு நாள் தொடர் வெற்றி மூலம் பாகிஸ்தான் செய்த அரிய சாதனை என்னவெனில், 21-ம் நூற்றாண்டில் தென் ஆப்பிரிக்காவில் மூன்று இருதரப்பு ஒருநாள் தொடர்களை வென்ற ஒரே அணி என்ற பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி நெருங்கும் சமயத்தில் ஒருநாள் தொடர்களில் கொடி நாட்டி வருகிறது பாகிஸ்தான் அணி, இந்த வெற்றியுடன் சேர்த்து 5 ஒருநாள் இருதரப்பு தொடர்களைத் தொடர்ச்சியாக வென்றுள்ளது பாகிஸ்தான். கடைசியாக ஆஸ்திரேலியாவிலும் ஜிம்பாப்வேயிலும் தொடர்களை வென்றதையடுத்து இப்போது தென் ஆப்பிரிக்காவிலும் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

ஆனாலும், பாகிஸ்தான் அணியில் பிரச்சினைகள் இல்லாமலில்லை. பாபர் அசாம் 21 இன்னிங்ஸ்கள் கழித்து ஒரு அரைசதம் எடுத்துள்ளார். பாபர் அசாம், ரிஸ்வான் சேர்ந்து 201 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளனர், ஆனால் மற்றவர்கள் அனைவரும் சேர்ந்தே இவ்வளவு ஒருநாள் போட்டிகளை ஆடிய அனுபவமற்றவர்களாக உள்ளனர், இது நிச்சயம் சாம்பியன்ஸ் டிராபியில் அணிகள் பாகிஸ்தானுக்கு எதிரான திட்டத்தை வகுக்க வகை செய்யும்.

தென் ஆப்பிரிக்க அணி மாற்றத்தில் இருக்கிறது. அதன் பேட்டிங் வாண்டர் டசன், மார்க்ரம், டேவிட் மில்லர் போன்றவர்களை மட்டுமே நம்பியுள்ளது. பந்து வீச்சில் மார்க்கோ யான்சனைத் தாண்டி எந்த வித ஊடுருவலும் இல்லாத ‘அர்ச்சனைப் பூக்கள்’ பவுலிங் போல் உள்ளது.

பாகிஸ்தான் அணி சயீம் அயூப் மூலம் ஓர் அட்டகாசமான தொடக்க வீரரைக் கண்டுபிடித்துள்ளது. அதேபோல் சல்மான் அகா மூலம் நல்ல ஆல்ரவுண்டரையும் அணியில் கொண்டுள்ளது. பவுலிங்கில் ஷாஹின் ஷா அஃப்ரீடி, நசீம் ஷா, அப்ரார் அகமது போன்றோரும் நல்ல பார்மில் இருக்கின்றனர். சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் வெல்ல நல்ல விதமான அணி ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com