இப்போது உலகின் அதிவேகமான ஃபார்முலா–1 கார் ரேஸ்களுக்கும் அடித்தளம் போட இருக்கிறது தெலங்கானா. அது சரி; எலெக்ட்ரிக்குக்கும் இந்த ஃபார்முலா கார் ரேஸுக்கும் என்ன சம்பந்தம்? ஆம், இந்த ஃபார்முலா கார் ரேஸ், ஒரு சுத்தமான எலெக்ட்ரிக் ரேஸ். மணிக்கு 300 கிமீ வேகத்தில் ‘வ்வ்வ்ர்ர்ரூம்’ என காதைக் கிழிக்கும் சத்தத்துடன் பறக்கும் கார்கள்தான், ஃபார்முலா 1–ன் அழகே! அதே கார்கள், சத்தமே போடாமல், அதே வேகத்துடன், எக்ஸாஸ்ட் புகையே இல்லாமல்… ட்ராக்கில் ஓடினால் எப்படி இருக்கும்! அதுதான் எலெக்ட்ரிக் ஃபார்முலா கார் ரேஸ்.
இதைத்தான் ‘ஃபார்முலா–இ’ கார் ரேஸ் என்கிறார்கள். அஃபீஷியலாக இதை `ABB FIA Formula E’ வேர்ல்டு சாம்பியன்ஷிப் ரேஸ் என்று அழைக்கிறார்கள். இப்போது ஃபார்முலா இ ரேஸின் 8–வது சீஸன் மெக்ஸிகோ, சவுதி, கனடா, அமெரிக்கா, தெற்கு கொரியா, இத்தாலி, லண்டன் என்று பல நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த வாரம் இந்தோனேஷியாவில் நடந்த 8–வது ரவுண்டில், ஜாகுவார் TCS டீமைச் சேர்ந்த மிட்ச் ஈவன்ஸ் என்பவர், முதலாம் இடம் வந்திருக்கிறார். ஜகார்த்தாவில் நடந்த இந்தப் போட்டியின் 60,000 பார்வையாளர்களில் இந்தோனேஷியப் பிரதமரும் கூட்டத்தோடு கூட்டமாக வந்து போட்டியைக் கண்டு ரசித்திருக்கிறார் என்றால், இந்த விளையாட்டின் மகத்துவம் புரியும்.
அப்படிப்பட்ட எலெக்ட்ரிக் ஃபார்முலா கார் ரேஸ், இந்தியாவுக்கு வந்தால் நமக்குப் பெருமைதானே! ஏற்கெனவே, ஃபார்முலா–1 ரேஸ், தலைநகர் டெல்லியில் உள்ள புத் ரேஸ் ட்ராக்கில் நடந்தபோது, மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்கள் மொத்தமும் இந்தியாவுக்குப் படையெடுத்தார்கள். ஃபார்முலா–1 கார் ரேஸ், நம் நாட்டு ஐபிஎல்–க்கு இணையாக, உலகம் முழுதும் பெரிய ரசிகர் பலம் கொண்ட காஸ்ட்லியான ஒரு மோட்டார் ஸ்போர்ட்ஸ்.