பட மூலாதாரம், Getty Images
சென்னையில் நேற்று (டிச. 11) முதல் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் இன்றும் மழை தொடர்கிறது. அடுத்த சில தினங்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இன்று பரவலாக மழை பெய்துவருகிறது.
மேலும், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 13,000 கன அடி உபரி நீர் திறக்கப்படுவதால், கடலூரில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
வானிலை அறிவிப்பு என்ன?
இதுதொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (டிச. 12) வெளியிட்ட அறிவிப்பில், “மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளது. இது தென் தமிழகத்தை நோக்கி மேற்கு – வடமேற்கு திசையில் நகரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், 13, 16, 17 ஆகிய தேதிகளிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாகையில் அதிகளவிலான மழைப் பொழிவு
பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியில் 14 செ.மீ, வேளாங்கண்ணியில் 13 செ.மீ, செங்கப்பட்டு அருகே மதுராந்தகத்தில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் கொளத்தூர், மாதாவரம், பெரம்பூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 11 செ.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. சென்னையில் விடிய விடியத் தொடரும் மழையால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
“சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. சென்னையில் மாலை நேரத்திற்குப் பிறகு மழை படிப்படியாகக் குறையும்” என்று தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தனது சமூக ஊடக பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் தொடர் கனமழை காரணமாக 6 ஏர் இந்தியா விமானங்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வருவதால், நீர்வரத்துக்கு ஏற்ப நீர் வெளியேற்றம் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று சாத்தனூர் அணையின் உதவி செயற்பொறியாளர் இன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இந்த அணையிலிருந்து காலை 10 மணி நிலவரப்படி விநாடிக்கு 13,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்து விநாடிக்கு 8,000 கன அடியாக உள்ளது.
சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவான 119 அடியில் 117.40 அடி தண்ணீர் தற்போது இருப்பு உள்ளது. சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுவதாக, நீர்வளத்துறை அறிவித்துள்ளது.
எனவே, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, ஃபெஞ்சல் புயல் நேரத்தில், சாத்தனூர் அணையில் இருந்து நள்ளிரவில் முறையான அறிவிப்பின்றி தண்ணீர் திறக்கப்பட்டதால் பலத்த சேதம் ஏற்பட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டதாகவும் முறையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தமிழக அரசு கூறியிருந்தது.
நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், `நாளை தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்’ என்று தெரிவித்தார்.
“நேற்று இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணிநேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவக்கூடும்” என்று விளக்கினார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறிய அவர் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். அந்த 3 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 16 சதவீதம் அதிகமாகப் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
டிசம்பர் 15ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறிய அவர், அது குறித்த தகவல்களை அடுத்த செய்தியாளர் சந்திப்பில் விவரிப்பதாகத் தெரிவித்தார்.
சென்னையில் மழை தொடருமா?
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுக்குறையும் என்றும் நாளை கடலோர மாவட்டங்களில் மழைத் தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, “அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.”
“அடுத்த 24 மணிநேரத்திற்கு தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது,” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை கணிப்புகள் தவறுகிறதா?
“ரெட் அலர்ட் என்று அறிவிப்பு கொடுத்த பின்னர் ஆரஞ்சு அலர்ட் ஆக மாற்றும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது, தொழில்நுட்பம் மேம்படவில்லையா? வானிலை நிகழ்வுகளை துல்லியமாகக் கணிக்க முடியாதது ஏன்?” என செய்தியாளர்கள் இயக்குநர் பாலச்சந்திரனிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “வானிலையியல் என்பது முழுமையாக அறிந்து கொள்ளப்பட்ட அறிவியல் கிடையாது. இன்றைய காலகட்டத்தில் 100% எப்போழுதுமே ஒரு வானிலை நிகழ்வை துல்லியமாகக் கணித்துவிட முடியாது.
வானிலை நிகழ்வென்பது பலவிதமான காரணங்களால் நிகழக் கூடியது. எல்லாமே ஒன்றோடொன்று சார்ந்திருக்கும். எனவே சில நேரங்களில் கணிப்புகள் தவறிவிடுகிறது.
மேம்பட்ட தொழில்நுட்பத்தை வைத்து 100% கணித்துவிடலாம் என்று நினைப்பது தவறு. ஒரு கருவியில் இருந்து கிடைக்கும் தரவுகளை வைத்து, பல்வேறு காரணிகளால் ஏற்படும் வானிலை நிகழ்வை கணிப்பது கடினம்” என்று விளக்கினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.