தலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து – நெய் புலவ் | Ghee Pulav

Share

செய்திப்பிரிவு

Last Updated : 22 Dec, 2019 10:09 AM

Published : 22 Dec 2019 10:09 AM
Last Updated : 22 Dec 2019 10:09 AM

தொகுப்பு, படங்கள்: வி.சாமுவேல்

எப்போதும் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம்மை நாமே உணரவும் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தவைதாம் பண்டிகைகள்.

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும் என்றாலும் அனைத்துமே மகிழ்ச்சியையும் மனித நேயத்தையும் அன்பையும் அடிப்படையாகக் கொண்டவை. இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையும் அன்பையும் சமாதானத்தையும் பரப்பத் தவறுவதில்லை.

அவற்றுடன் சேர்த்து நாவூறச்செய்யும் பலகாரங்களையும் சேர்த்தே இந்தப் பண்டிகை நமக்குப் பரிசாகத் தருகிறது. கிறிஸ்துமஸ் நாளன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த வி. செல்வி.

நெய் புலவ்

என்னென்ன தேவை?

பாஸ்மதி அரிசி – அரை கிலோ

பட்டை லவங்கம் – சிறிதளவு

நெய் – 100 கிராம்

வெங்காயம் – கால் கிலோ

பச்சைப் பட்டாணி – 100 கிராம்

பச்சை மிளகாய் – 4 முதல் 5

இஞ்சி-பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சைச் சாறு – கால் மூடி

தயிர் – 50 கிராம்

புதினா, கொத்தமல்லி – சிறிதளவு

முந்திரி – 50 கிராம்

உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசியை ஊறவைத்துக் கொள்ளுங்கள். வாயகன்ற பாத்திரத்தில் நெய்யை ஊற்றி முந்திரித் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுத்துக்கொள்ளுங்கள். பிறகு அதில் பட்டை, லவங்கத்தைப் போட்டுத் தாளித்து வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் பட்டாணி, பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்க வேண்டும். இப்போது இஞ்சி-பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, தயிர், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வதக்கியபின் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துக் கிளறிவிட வேண்டும். தண்ணீர் கொதித்தபின் ஊறவைத்த அரிசியை அதில் போட்டு மிதமான சூட்டில் மூட வேண்டும். 20 நிமிடம் கழித்து அரிசி வெந்த பிறகு வறுத்த முந்திரி, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை மேலே தூவிப் பரிமாறுங்கள்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com