வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வென்ற கையோடு, நியூசிலாந்து அணியையும் எளிதாக வென்றுவிடலாம் என மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கிய இந்திய அணி, சொந்த மண்ணில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது.
பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில், சொந்த மண்ணில் ஒரு இன்னிங்ஸில் முதல்முறையாக 50 ரன்களுக்குள் சுருண்டது இந்தியா.

புனேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து சொந்த மண்ணில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை இழந்தது. தற்போது, மும்பையில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் 147 என்ற இலக்கை கூட எடுக்க முடியாமல் தோல்வியடைந்து, 24 வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் முழுமையாக டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது இந்தியா.
தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “ஒரு டெஸ்ட் தொடரை இழப்பது அவ்வளவு எளிதானதல்ல. அதை ஜீரணிக்கவே முடியாது. எங்களுக்குத் தெரியும், நாங்கள் எங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. நிறைய தவறுகளைச் செய்துவிட்டோம். அதை நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். நியூசிலாந்து வீரர்கள் எங்களை விடச் சிறப்பாகச் செயல்பட்டனர். நான் பேட்டிங் செய்யச் செல்லும்போது என் மனதில் சில யோசனைகள் இருந்தன. ஆனால், இந்தத் தொடரில் அது முழுமையாக வெளிவரவில்லை. அது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

இதுபோன்ற ஆடுகளங்களில் எப்படி பேட் செய்வது என்று ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், கில் ஆகியோர் காண்பித்தார்கள். கடந்த 3, 4 வருடங்களாக இதுபோன்ற ஆடுகளங்களில் நாங்கள் விளையாடுகிறோம். எப்படி விளையாடுவது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், இந்தத் தொடரில் அது நடக்கவில்லை. அது எங்களைக் காயப்படுத்தப்போகிறது. மேலும், நான் பேட்ஸ்மேனகாவும், ஒரு கேப்டனாகவும் என்னுடைய சிறந்த நிலையில் இல்லை. மொத்தத்தில், நாங்கள் அணியாகச் சிறப்பாகச் செயல்படாததே இந்தத் தோல்விக்குக் காரணம்.” என்று கூறினார்.