வங்கதேச அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி நேற்று முழுமையாக வென்றது. ஹைதராபாத்தில் நேற்று கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்து, டி20 கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவுசெய்தது.
இதில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், 47 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார்.


இவரோடு, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 75, ஹர்திக் பாண்டியா 47, ரியான் பராக் 34 ரன்கள் குவித்தனர். பின்னர், 298 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்து 133 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சனும், தொடர் நாயகனாக ஹர்திக் பாண்டியாவும் தேர்வு செய்யப்பட்டனர்.


அப்போது பேசிய ஹர்திக் பாண்டியா, “கேப்டனும், பயிற்சியாளரும் கொடுத்த சுதந்திரம், ஒட்டுமொத்த குழுவுக்கும் அருமையாக இருந்தது. விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் அது சென்றடைந்தது. ட்ரெஸ்ஸிங் மகிழ்ச்சியாக இருக்கும்போதும், அனைவரின் வெற்றியையும் அனைவரும் கொண்டாடும்போதும், அணிக்காக இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று தோன்றும்” என்று கூறினார்.