- எழுதியவர், பிராங்க் கார்ட்னர்
- பதவி, பிபிசி நிருபர்
-
ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்திருப்பது, லெபனானில் அந்த அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
பேரழிவை ஏற்படுத்தக் கூடிய முழு அளவிலான மோதலுக்கு அருகே இந்தப் பிராந்தியத்தை அது கொண்டுவந்துள்ளது. இந்த மோதலுக்குள் இரானும், அமெரிக்காவும் குதிக்கவும் வாய்ப்பு உள்ளது.
லெபனானின் சக்தி வாய்ந்த ஆயுத அமைப்பான ‘ஹெஸ்பொலா’ வின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்தார்.
வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் நஸ்ரல்லா உட்பட பல ஹெஸ்பொலா தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
நீண்ட நேரத்திற்குப் பிறகு ஹெஸ்பொலா இந்த செய்தியை உறுதிப்படுத்தியது. “இந்தப் பிராந்தியத்தின் தெற்கில் நிகழ்ந்த ஒரு துரோக சியோனிச தாக்குதலில் நஸ்ரல்லா இறந்தார்” என்று அது கூறியது.
இஸ்ரேலுக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என்றும் அந்த அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் அடுத்து என்ன நடக்கும் என்பது மூன்று முக்கியமாக அடிப்படைக் கேள்விகளை சார்ந்துள்ளது.
ஹெஸ்பொலா என்ன செய்யும்?
இதில் முதல் கேள்வி ஹெஸ்பொலா தொடர்பானது. இனி அந்த அமைப்பு என்ன செய்யும்?
இஸ்ரேலுடனான சமீபத்திய மோதலில், ஹெஸ்பொலா ஒன்றன்பின் ஒன்றாக பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.
பத்துக்கும் மேற்பட்ட தளபதிகள் கொல்லப்பட்டது அதன் உயர்மட்ட கட்டமைப்பை அழித்துவிட்டது. சமீப நாட்களில் நிகழ்ந்த, பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி வெடிப்புகள் அதன் தகவல் தொடர்பு அமைப்பை சேதப்படுத்தியுள்ளன.
இது தவிர இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஹெஸ்பொலாவின் பெருமளவு ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
“ஹசன் நஸ்ரல்லாவின் மரணம் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். இது அந்த அமைப்பின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கக் கூடும். சிறிது காலத்திற்கு அதன் அரசியல் மற்றும் ராணுவ உத்திகளில் மாற்றம் ஏற்படக்கூடும்,” என்று அமெரிக்காவைச் சேர்ந்த மத்திய கிழக்கு பாதுகாப்பு நிபுணர் முகமது அல்-பாஷா கூறுகிறார்.
ஆனால் இஸ்ரேலை கடுமையாக எதிர்க்கும் இந்த அமைப்பு திடீரென தோல்வியை ஏற்றுக்கொண்டு இஸ்ரேலின் நிபந்தனைகளின்படி சமாதானத்திற்காக முன்னேறும் என்று எதிர்பார்ப்பது தவறாக இருக்கலாம்.
போராட்டத்தை தொடரப் போவதாக ஹெஸ்பொலா ஏற்கனவே சூளுரைத்துள்ளது. இந்த அமைப்பில் இன்னும் ஆயிரக்கணக்கான போராளிகள் உள்ளனர். அவர்களில் பலருக்கு சமீபத்தில் சிரியாவில் சண்டையிட்ட அனுபவம் உள்ளது. பழிவாங்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.
அவர்களிடம் இன்னும் ஏவுகணைகளின் பெரிய கையிருப்பு உள்ளது. டெல் அவிவ் மற்றும் இஸ்ரேலின் பிற முக்கிய நகரங்களை தாக்கக் கூடிய துல்லியமான வழிகாட்டுதல் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளும் இதில் அடங்கும்.
இஸ்ரேலிய தாக்குதல்களில் அவை அழிக்கப்படுவதற்கு முன்னர் அவற்றை விரைவாகப் பயன்படுத்துமாறு அமைப்பிற்குள் இருந்து ஹெஸ்பொலா அழுத்தத்தை எதிர்கொள்ளக் கூடும்.
ஆனால் அந்த அமைப்பு இஸ்ரேலின் வான் பாதுகாப்பை முறியடித்து பெரிய தாக்குதலை நடத்தி அதில் பெரும் எண்ணிக்கையில் பொதுமக்கள் கொன்றால், அதற்கான இஸ்ரேலின் எதிர்வினை பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும்.
அதன் பிறகு இஸ்ரேல் லெபனானின் உள்கட்டமைப்பை முற்றிலுமாக அழிக்க வாய்ப்புள்ளது. அது இரான் வரை பரவக்கூடும்.
இரான் சென்ன செய்யும்?
ஹசன் நஸ்ரல்லாவின் படுகொலை ஹெஸ்பொலாவுக்கு எவ்வளவு பெரிய அடியாக இருக்கிறதோ அதே அளவு அது இரானுக்கும் பெரிய அடியாகும். நஸ்ரல்லாவின் மறைவுக்கு 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று இரான் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இரானும் பல அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி ஒரு ரகசிய இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஜூலை மாதம் டெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட பின்னர் இரான் இதுவரை எந்த பழிவாங்கும் நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இப்போது நஸ்ரல்லாவின் படுகொலைக்குப் பிறகு, இரானில் ஆட்சியில் இருக்கும் அடிப்படைவாதிகள் சில வகையான எதிர்வினைகளை கருத்தில் கொள்ளலாம்.
மத்திய கிழக்கில் உள்ள தனது நட்பு நாடுகளில் பெருமளவு ஆயுத வலு கொண்ட போராளிகளின் முழு அமைப்பும் இரானிடம் உள்ளது. இது ’ஆக்ஸிஸ் ஆஃப் ரெஸிஸ்டென்ஸ்’ (Axis of Resistance) என்று அழைக்கப்படுகிறது.
ஹெஸ்பொலாவைத் தவிர, ஏமனில் ஹூதி, சிரியா மற்றும் இராக்கில் பல அமைப்புகளும் உள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இலக்குகள் மீதான தாக்குதல்களை அதிகரிக்குமாறு இரான் அவைகளிடம் சொல்லலாம்.
ஆனால் இரான் எந்த விருப்பத்தை தேர்வு செய்தாலும் அது ஒரு பெரிய போரைத் தூண்டிவிடும். அதில் வெற்றி கிடைக்கும் என்று உறுதியாக சொல்லமுடியாது.
இஸ்ரேல் என்ன செய்யும்?
ஹசன் நஸ்ரல்லாவின் படுகொலைக்கு முன்னர் இஸ்ரேலின் நோக்கம் குறித்து யாருக்காவது சந்தேகம் இருந்திருந்தால் அது இப்போது முற்றிலுமாக தீர்ந்திருக்கும்.
தனது நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா உட்பட 12 நாடுகளால் முன்மொழியப்பட்ட 21 நாள் போர் நிறுத்த யோசனைக்கு இணங்க தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்தும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை.
ஹெஸ்பொலா பதில் தாக்குதல் தொடுக்கும் என்று இஸ்ரேலிய ராணுவம் உறுதியாக நம்புகிறது. எனவே ஏவுகணைகளின் அச்சுறுத்தல் அகற்றப்படும் வரை தாக்குதலைத் தொடர அது விரும்புகிறது.
இந்த நேரத்தில் ஹெஸ்பொலா சரணடையும் சாத்தியக்கூறும் தென்படவில்லை. எனவே தன் படைகளை அனுப்பாமல் ஹெஸ்பொலாவின் அச்சுறுத்தலை இஸ்ரேல் எவ்வாறு சமாளிக்க முடியும்? ஹெஸ்பொலாவை முழுமையாக அழிப்பதே இஸ்ரேலின் நோக்கம்.
இதற்காக எல்லைக்கு அருகில் தனது தரைப்படைகள் பயிற்சி செய்து கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.
ஆனால் ஹெஸ்பொலா அமைப்பு முந்தைய போர் முடிவடைந்த பிறகு கடந்த 18 வருடங்களாக போர் பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. இதன் பொருள் என்னவென்றால் நிலத்தில் போரை நடத்துவது இஸ்ரேலுக்கு அவ்வளவு எளிதானதாகத் தெரியவில்லை.
ஹசன் நஸ்ரல்லா தான் இறப்பதற்கு முன் தனது ஆதரவாளர்களிடையே ஆற்றிய உரையில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது ‘ஒரு வரலாற்று வாய்ப்பு’ என்று கூறினார்.
அதாவது இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் லெபனானுக்குள் நுழைவது எளிதாக இருக்கும். ஆனால் காஸாவைப் போல அல்லாமல், அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதற்கு பல மாதங்கள் ஆகலாம்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு