சுண்டைக்காய் தீயல் எனும் சுவையோவியம்! | விருந்தோம்பல் | My Vikatan | My vikatan sundakai theeyal recipe

Share

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 20

பூண்டுப் பற்கள் – 15

பச்சை சுண்டைக்காய் – ஒரு கப்

புளி – சிறிய எலுமிச்சை அளவு

பொடி பற்களாக நறுக்கிய தேங்காய் – அரை கப்

வெந்தயம் – கால் டீஸ்பூன்

கடுகு & உளுந்து – ஒரு டீஸ்பூன்

வெல்லம் – அரை டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 4 குழிக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்க

தேங்காய்த்துருவல் – ஒரு கப்

சீரகம் – கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

மிளகாய்த்தூள் – மூன்று டீஸ்பூன்

தனியா தூள் – இரண்டு டீஸ்பூன்

செய்முறை

சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை தோலுரித்து நீளமாக நறுக்கவும். சுண்டைக்காய் காம்புகளை நீக்கி லேசாக தட்டிக் கொள்ளவும். புளியை ஊறவைத்து ஒரு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது தேங்காய் விட்டு சூடானதும் அதில் சீரகம், தேங்காய்த்துருவல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கைவிடாமல் சிவக்கும் வரை வறுக்கவும். தேங்காய் ஈரப்பதம் போகும் வரை சிவந்து வந்தபின் அடுப்பை அணைத்து மிளகாய்த்தூள் மற்றும் தனியாத்தூள் சேர்த்து பிரட்டி விடவும். பின் சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு மண்சட்டியில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம், கடுகு உளுந்து சேர்த்து தாளிக்கவும்.

பின் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் பற்கள், தட்டிய சுண்டைக்காய் சேர்த்து கைவிடாமல் வதக்கவும். அவை செம்பு நிறமாக மாறும் வரை வதக்கி கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

புளிக்கரைசல் கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்து வைத்துள்ள விழுது, கால் கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.

அவை கொதிக்க ஆரம்பித்ததும் சிறிது வெல்லம் சேர்த்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.

உங்கள் கவனத்துக்கு
* தீயலின் சுவை வறுக்கும் பொருட்களை பதமாக சிவக்கும் வரை வறுப்பதிலும் அதை பதமாக அரைப்பதிலும் உள்ளது. தேங்காயை வறுக்கும் போது கருகாமல் வறுக்க வேண்டும். அரைக்கும் போது தண்ணீர் அதிகமாக விடாமல் அரைக்கவும். 
* குழம்பிற்கு வெங்காயம், பூண்டு, தேங்காய் மற்றும் சுண்டைக்காயைப் பதமாக சிவக்கும் வரை வதக்க வேண்டும். 
* வறுத்து அரைக்கும் பொருட்களில் இருக்கும் லேசான கசப்பு சுவையை அகற்றுவதற்கு சிறிது வெல்லம் சேர்க்கிறோம்.  

சுடச்சுட சாதத்தில் எண்ணெய் தெளிய மண்சட்டியில் செய்த பச்சை சுண்டைக்காய் தீயலை ஊற்றி சாப்பிட்டுப் பாருங்கள். அலாதி சுவையில் இருக்கும்.  My Vikatan -ல் இதுவரை வெளியான விருந்தோம்பல் சிறப்பு ரெசிப்பி வீடியோக்களை இங்கே https://bit.ly/3Op3QQ2 காணலாம். இது போல  மற்றுமொரு அறுசுவை அனுபவ விருந்தோடு சந்திப்போம்!

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com