“மனைவி எட்டி உதைச்சிட்டா டாக்டர்…'' – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 133

Share

முதலிரவில் ஆரம்பித்து, தொடர்ச்சியாக மனைவி தாம்பத்திய உறவுக்கு மறுத்தால், சம்பந்தப்பட்ட கணவனுக்கு விவரிக்க முடியாத அளவுக்கு ஏமாற்றமும் கோபமும் ஏற்படும். அந்த உணர்வுகளை சற்று தள்ளி வைத்துவிட்டு யோசித்தால், மனைவியிடம் மனம் விட்டுப் பேசினால், பிரச்னை தீர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். இதுதொடர்பான கேஸ் ஹிஸ்டரியுடன் தீர்வுகளையும் விவரிக்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

”அந்த இளைஞருக்கு திருமணமாகி ஒருமாதம் தான் ஆகியிருந்தது. மனைவியையோ, வேறு குடும்பத்தினரையோ உடன் அழைத்து வராமல் தனியாக வந்திருந்தார். செக்ஸ் பிரச்னைக்காக முதல்முறை என்னை சந்திக்க வருபவர்கள் சற்று பதற்றமாக இருப்பார்கள். பேச்சில் தயக்கம் இருக்கும். இந்த இளைஞரிடம் அதெல்லாம் இல்லை. ஆனால், அவருடைய முகத்தை உற்று கவனித்தால் புலப்படக்கூடிய அளவுக்கு கோபம் தெரிந்தது. அதை பேச்சில் வெளிப்படுத்தாமல் தெளிவாகப் பேச ஆரம்பித்தார்.

Sexologist Kamaraj

‘டாக்டர் நான் சின்னதா ஒரு பிசினஸ் செஞ்சுக்கிட்டிருக்கேன். நல்லா போயிட்டிருக்கு. கல்லூரி நாள்கள்ல இருந்தே பிசினஸ்தான் என்னோட எதிர்காலம்னு முடிவு செஞ்சுட்டதால, அதுதொடர்பான மேற்படிப்பு, டிரெய்னிங்னு கவனமா இருந்தேன். சில கேர்ள்ஸ் மேல ஈர்ப்பு வந்தாலும், லவ் பண்ணா நம்மோட குறிக்கோள் பாழாகிடலாம்னு அதையெல்லாம் தவிர்த்துட்டேன். நான் ஆசைப்பட்ட மாதிரி பிசினஸ் ஆரம்பிச்சு இப்போ சக்சஸ்ஃபுல்லா இருக்கேன். தங்கைக்கு கல்யாணம் செஞ்சேன். வீடு, கார்னு இப்போ என்கிட்ட எல்லாமே இருக்கு. இப்போ எனக்கு 35 வயசு. (ஆனா, அந்த வயசைவிட பார்க்க ரொம்ப இளமையா, ஃபிட்டா தெரிஞ்சார்) அப்பாம்மா தான் பொண்ணு பார்த்து கல்யாணம் செஞ்சு வைச்சாங்க.

பொண்ணு பார்க்கிறப்போவே ரெண்டு பேரும் பேசி, ஒருத்தரையொருத்தர் பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டதுக்கப்புறம் கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன். பிசினஸ், பிசினஸ்னு நேரங்காலம் தெரியாம ஓடிட்ட இருந்த எனக்கு, மனைவி மூலமா தான் ஹேப்பினஸ் கிடைக்கும்னு நம்பிட்டிருந்தேன். ஆனா, கல்யாணமாகி ஒரு மாசமாகியும் எங்களுக்குள்ள செக்ஸ் நடக்கல. அன்பா பேசிப் பார்த்தேன். ஆசையா நடந்துக்கப் பார்த்தேன். ‘தலை வலிக்குது… பீரியட்ஸ் வர மாதிரி இருக்கு… இன்னிக்கு வேணாம்… தூக்கம் வருது…’னு ஏதோ ஒரு காரணம் சொல்லி செக்ஸை தவிர்த்திடுறா… ஒருநாள் ஃபீலிங்கை கன்ட்ரோல் பண்ண முடியாம ட்ரை பண்ணேன். எட்டி உதைச்சுத் தள்ளிட்டா. இதுக்கு மேல அவகிட்ட நெருங்கிறதுக்கு என்னோட ஈகோ இடம் கொடுக்காது டாக்டர். உங்ககிட்ட பேசிட்டுதான் என்ன முடிவெடுக்கிறதுன்னு எங்க பெற்றோர்கிட்ட பேசணும்’ என்றார்.

இவருடைய மனைவிக்கு இருக்கிற பிரச்னை திருமணமான பெண்களில் 4 சதவிகிதம் பேருக்கு இருக்கிறது. இதை மருத்துவர்கள் ‘வஜைனிஸ்மஸ்’ என்போம். ‘செக்ஸ் செஞ்சா வலிக்குமோ’ என்கிற பயத்தில் ஆரம்பித்து சிறுவயதில் சந்தித்த பாலியல் வன்முறை வரைக்கும் வஜைனிஸ்மஸ்க்கு பல காரணங்கள் இருக்கின்றன. முடிந்த வரைக்கும் உறவைத் தள்ளிப்போட முயற்சி செய்வார்கள். கணவர் முரட்டுத்தனமாக அத்துமீறும்போது, அவர்களையறியாமல் கணவரை எட்டி உதைத்து விடுவார்கள்.

Sex Education

உங்களுடைய மனைவியின் பிரச்னையும் இதுதான். அதனால், ஈகோவோடு இந்தப் பிரச்னையை அணுகாதீர்கள். உங்கள் மனைவியை ஆதரவாக நடத்துங்கள். பயமா, பாலியல் வன்முறையா… அவருடைய பிரச்னைக்கு எது காரணம் என்பதை விசாரியுங்கள். உங்களால் முடியவில்லையென்றால், உளவியல் ஆலோசகரின் உதவியை நாடுங்கள்” என்றேன். அடுத்த சந்திப்பில் மனைவியுடன் வந்தார். மனைவிக்கு சிறுவயதில் பாலியல் அத்துமீறல் நடந்திருப்பதைத் தெரிவித்தார். அதன்பிறகு, பழைய நினைவுகளில் இருந்து எப்படி வெளிவருவது என மனைவிக்கும், மனைவியை எப்படி நடத்த வேண்டுமென்று கணவருக்கும் கவுன்சலிங் வழங்கி அனுப்பி வைத்தேன். இப்போது நலமாக இருக்கிறார்கள்.

திருமணமாகாத ஆண்களுக்கு ஒரு வார்த்தை, மனைவி உறவுக்கு மறுத்தால், உடனே திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிடாதீர்கள். 60 சதவிகிதம் பெண் குழந்தைகள் பாலியல் அத்துமீறலைச் சந்திப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. காரணமறிந்து, தீர்வை நாடுங்கள்” என்கிறார் டாக்டர் காமராஜ்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com