தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி நடைபெற்று வந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். மாபெரும் இறுதிப்போட்டி சென்னை தரமணியில் உள்ள இன்ஸ்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் சனிக்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கியது.

போட்டியின் நடுவர் மற்றும் பிரபல செஃப் தீனா, வசந்தபவன் ஹோட்டலின் நிர்வாக இயக்குநர் ஸ்வர்ணலதா ரவி, இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் முதல்வர் பிரமிளா ரஞ்சித், அவள் விகடன் ஆசிரியர் ச.அறிவழகன், விகடன் நிறுவனத்தின் பொதுமேலாளர் (விற்பனை) பாலமுருகன், துணை பொதுமேலாளர் (மார்கெட்டிங்) ஜான் ஜஸ்டின் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்புடன் தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அவள் விகடன் ஆசிரியர் ச. அறிவழகன் பேசுகையில், “நான் கல்லூரியில் படிக்கும்போது 8 ஆண்டுகள் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். அப்போது எனக்கான உணவை நானே சமைத்துச் சாப்பிடுவேன்.

நான் சிறு வயதாக இருக்கும்போது என் பெற்றோர் வயலுக்குப் போகும்போது, அடுப்பில் சமையலைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் போவார்கள். சமையல் என்பது பெண்களுக்கானது மட்டுமல்ல அல்ல. அது ஒரு கலை. ஆண், பெண் இருவருக்கும் சமையல் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்” என்றார்.

வசந்த பவன் ஹோட்டல்களின் நிர்வாக இயக்குநர் ஸ்வர்ணலதா ரவி பேசும்போது, “என் வெளியூர் பயண நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று வந்திருக்கிறேன். இறுதிப்போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.
இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் முதல்வர் பிரமிளா ரஞ்சித், “60 ஆண்டுக்கால பழைமையான இந்தக் கல்லூரியில் சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.

பல்வேறு கட்ட சுற்றுகளுக்குப் பிறகு அனைரும் இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, இறுதிப்போட்டியில் பங்கேற்பவர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான்” என்றார்.
போட்டியின் நடுவர் செஃப் தீனா, “அவள் விகடனின் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டிக்காக தமிழகம் முழுவதும் மூன்று மாதம் பயணித்ததால், உங்கள் வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டு நான் எட்டு கிலோ எடை அதிகரித்திருக்கிறேன். ஆண்களும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

உங்கள் வீட்டில் யாராவது சமையல் செய்து கொடுக்கும்போது அவர்களைப் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள். திருமணமாகி முதல் இரண்டு ஆண்டுகளும் நானும் என் மனைவியைப் பாராட்டியதே இல்லை. ஒருமுறை என் மனைவியே, ‘நான் சமைக்கும்போது நல்லா சாப்பிடுறீங்க. அப்ப சமையல் நல்லா இருக்குன்னா பாராட்ட வேண்டியதுதானே’ன்னு கேட்டாங்க. அதுக்கப்புறம்தான் எனக்கு அந்த உணர்வு வந்துச்சு. நானும் பாராட்டத் தொடங்கினேன். இதுபோல நீங்களும் செய்து பாருங்க. லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்” என்றார்.

தொடக்க நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பாலா, KPY விக்கி சிவா ஆகியோரும் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்பவர்களின் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் மிமிக்ரி செய்து மகிழ்வித்தனர்.
முதல் சுற்று…
தமிழகம் முழுவதும் நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற 66 பேர் இறுதிப்போட்டிக்குத் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களில் 33 பேர் காலையில் நடைபெற்ற முதல்கட்டப் போட்டியில் பங்கேற்றனர். இறுதிப்போட்டியில் கல்யாண விருந்து அல்லது உணவே மருந்து ஆகிய 2 தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் போட்டியாளர்கள் சமைக்க வேண்டும்.

காலையில் நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் 16 பேர் உணவே மருந்து என்ற கான்செப்டிலும் 17 பேர் கல்யாண விருந்து என்ற கான்செப்படிலும் சமையல் செய்யத் தொடங்கினர். சமையலுக்குத் தேவையான பொருள்கள், பாத்திரங்கள், அடுப்பு என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சமையல் செய்வதற்கு ஒவ்வொரு போட்டியாளருக்கும் மொத்தம் 2 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டது.

” மராத்திய மன்னரான சரபேந்திர மஹாராஜா காலத்தில் எழுதப்பட்ட ஓலைச்சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ள கல்யாண விருந்து உணவுகளை சமைத்து காட்சிபடுத்தவிருக்கிறேன்” என்று பரபரப்புடன் சமைத்தார் திருச்சியைச் சேர்ந்த மருதுபாண்டியன். ‘சேரர்கள் அவையில் படைக்கப்பட்ட பெருஞ்சோறு’ எனப்படும் சங்ககால பிரியாணியை சிவப்பிறைச்சியைக் கொண்டும், நறுமணப்பொருள்களை வைத்தும் தயாரித்தார் சேலத்தைச் சேர்ந்த நந்தினி.
சம்பா ரவை இட்லி, நரிப்பயிறு ஆப்பிள், இலுப்பைப்பூ சம்பா வெண்பொங்கல், கருங்குறுவை கஞ்சி என வித்தியாசமாக சமையல் செய்தார் சேலத்தைச் சேர்ந்த அக்குபஞ்சர் நிபுணர் கோகிலா. “இந்த உணவு வகைகள் எல்லாம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியவை” என்று டிப்ஸும் வழங்கினார்.
“எங்க ஊரு ஸ்பெஷல் நல்லாம்பட்டி சிக்கன் ஃப்ரைடு ரைஸ். எந்த சாஸ் வகைகளும் பயன்படுத்தாமல் நறுமணப் பொருள்களை மட்டுமே கொண்டு செய்கிறேன்” என்றார் கோவையைச் சேர்ந்த காவ்யா.

போட்டியின் முதல் கட்டம் முடிந்திருக்கும் நிலையில் நடுவர் தீனா போட்டியாளர்கள் சமைத்து காட்சிப்படுத்தியிருக்கும் உணவுகளை ருசி பார்த்து மதிப்பெண் வழங்கிக்கொண்டு வருகிறார். மீதமிருக்கும் 33 பேர் சமையல் செய்வதற்காகத் தயாராகி வருகின்றனர். போட்டியின் நடுவே ‘அதோ அந்த பறவைப்போல வாழ வேண்டும்…’, ‘அடி என்னடி ராக்கம்மா..’ போன்ற பாடல்களை பாடிக் கொண்டே குதூகலமாக சமைத்தனர் போட்டியாளர்கள்.

போட்டியின் முதல் கட்டம் முடிந்திருக்கும் நிலையில் நடுவர் தீனா போட்டியாளர்கள் சமைத்து காட்சிப்படுத்தியிருக்கும் உணவுகளை ருசி பார்த்து மதிப்பெண் வழங்கி வருகிறார். அடுக்ககட்டமாக சமையல் செய்வதற்காக மீதமுள்ள 33 போட்டியாளர்கள் தயாராகி வருகின்றனர்.