ஒருநாள் பிரபோத் குமார், பேபியை அழைத்தார். “உனக்குப் புத்தகங்கள் பிடிக்குமா?’’
`பிடிக்கும்’ என்பதுபோல் தலையாட்டினார் பேபி.
“நான் ஒரு புத்தகம் தர்றேன் படிக்கிறியா?’’
“இந்த வயசுலயா, இவ்வளவு லேட்டாவா… இனிமே நான் வாசிக்கக் கத்துக்கிட்டு என்ன செய்யப்போறேன்?’’
“அப்பிடியில்லை. நாம விரும்புற ஒண்ணைக் கத்துக்கறதுக்கு தாமதம்னோ, வயசுன்னோ ஒண்ணும் இல்லை. நான் ஒரு புத்தகம் குடுக்குறேன். பொறுமையாப் படி.’’
அன்றைக்கு பிரபோத் குமார் பேபிக்குக் கொடுத்த புத்தகத்தின் பெயர் `Amar Meyebela (My Girlhood).’ தஸ்லிமா நஸ்ரினின் சுயசரிதை. மெதுவாகப் படிக்க ஆரம்பித்தார். அப்படியே அதற்குள் ஆழ்ந்துபோனார். தஸ்லிமாவின் வாழ்க்கையைப் படிக்கப் படிக்க அவருக்குள் ஒரு கொந்தளிப்பு. ஏழ்மைச் சமூகத்தில் பெண்கள் ஏன்தான் பிறக்கிறார்களோ என்கிற கோபம், இன்னும் என்னென்னவோ உணர்வுகளெல்லாம் எழுந்தன. மேலும் சில புத்தகங்களைக் கேட்டு வாங்கிப் படித்தார். படிக்கப் படிக்க, புதுவாசல் திறந்தது.
தென்னிந்தியாவுக்கு சுற்றுப்பயணம் போகவிருந்தார் பிரபோத். போவதற்கு முன்னால் பேபியை அழைத்தார். ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் அவரிடம் கொடுத்தார். “படிக்கறது இருக்கட்டும். நான் ஊருக்குப் போயிட்டுத் திரும்புறதுக்குள்ள எதையாவது இதுல எழுதி வை’’ என்றார்.
“நானா, எழுதறதா… இது நடக்குற கதையா?’’
“ஆமா. நீதான். நிச்சயம் எழுதுவே.’’ இப்படிச் சொல்லிவிட்டு, வெளியூருக்குக் கிளம்பிவிட்டார் பிரபோத் குமார்.
`எதை எழுதுவது… இளம் பருவத்தைத் தொலைத்ததையா… திகிலூட்டிய முதலிரவு அனுபவத்தையா… பதின்மூன்று வயதில் பிள்ளைப்பேறு வலியை அனுபவித்ததையா… இத்தனை வருடங்கள் வீட்டு வேலை செய்ததில் உடம்பெங்கும் பரவியிருக்கும் தழும்புகள் குறித்தா… எதை எழுதுவது?’
ஆரம்பத்தில் இப்படியெல்லாம் உணர்வுகள் திரண்டெழுந்தாலும், பேபி ஹால்தார், ஆறாவது வரை மட்டுமே படித்திருந்த அந்த எளிய மனுஷி எழுத ஆரம்பித்தார். அதுவரை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத தன் வாழ்க்கையை எழுத ஆரம்பித்தார். பகலில் வீட்டு வேலை; இரவில் எழுத்து வேலை. எழுத எழுத மனம் லேசானது போன்ற ஓர் உணர்வு. புரொபசர் பிரபோத் குமார் வீட்டுக்குத் திரும்பியபோது, 100 பக்கங்கள் வரை எழுதி முடித்திருந்தார் பேபி. அதைப் படித்துப் பார்த்தார் பிரபோத். அப்படியே ஆழ்ந்துபோனார். சில இடங்களைப் படித்தபோது அவருக்கே கண்கள் கலங்கின. மீதத்தையும் எழுதச் சொன்னார்.