டக் அவுட்டில் சாதித்த DK:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், வழக்கம் போல டக் – அவுட் ஆனார். ஆடம் ஜாம்பா வீசிய 16வது ஓவரில் எல்.பி.டபிள்யு ஆனார், தினேஷ் கார்த்திக். இதுவரை 220 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள இவர், ஐபிஎல் தொடரில் அதிக முறை (16) டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். இவருக்கு அடுத்து 234 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 16 முறை டக்-அவுட் ஆகியுள்ளார். இந்த தொடரில் பல வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு டக் அவுட்டாகி வருகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் வீரரான ஜோஸ் பட்லர் இந்தத் தொடரில் மட்டும், 4 முறை டக்-அவுட் ஆகியுள்ளார். நேற்றைய RR vs RCB ஆட்டத்தில் மட்டும், 5 வீரர்கள் டக்-அவுட் ஆகியுள்ளனர்.
அடுத்த சீசனில் தோனி!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு, சி.எஸ்.கே வீரர்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சுனில் கவாஸ்கர், ரிங்கு சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பல வீரர்கள் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கினர். போட்டிக்கு பிறகு பேசிய கவாஸ்கர், “தோனியைப் போன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறை மட்டுமே வருவார்கள். ஒரு தலைமுறைக்கு ஒருமுறை கூட வருவதில்லை. அதனால்தான், அவரை மேலும் மேலும் பார்க்க விரும்புகிறார்கள். இது தோனியின் கடைசி சீசனாக இருக்காது என்று நம்புகிறேன். அவர், இன்னும் சில காலம் விளையாட வேண்டும்.” எனக் கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் பேசுகையில், “எம்.எஸ்.தோனி அடுத்த சீசனிலும் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், ரசிகர்கள் இதேபோன்று எங்களைத் தொடர்ந்து ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.