ஒப்பந்தம், ஊதியம், வேலைப்பளு, ஷிஃப்ட் – செவிலியர்களின் குறைகள் களையப்படுமா? #InternationalNursesDay

Share

1854-ம் ஆண்டில் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் போர் தொடுத்தன. கிரிமியா போரில் பாதிக்கப்பட்ட ராணுவப் படைவீரர்களுக்கு யாருமே உதவ முன்வரவில்லை. பலர் உயிரிழக்கும் நிலையில் இருந்தனர். அந்த ராணுவ மருத்துவமனைக்கு, 38 செவிலியர்களுடன் சென்றார் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல். வசதிக் குறைவுகள் அங்கு காணப்பட்டாலும்,  தன்னால் முடிந்தவரை ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார். உயிருக்குப் போராடிய முழுப்படையையும் தன்னிடமிருந்த குறைந்த மருத்துவ வசதியைக் கொண்டும், நிறைந்த அன்பாலும் குணப்படுத்தினார். அந்த இரவு வேளைகளில் கையில் விளக்கு ஒன்றை ஏந்தியபடி நோயாளிகளிடம் சென்று நலம் விசாரித்து மருந்துகளையும் வழங்கினார்.

செவிலியர் தினம்

`தங்களைக் காக்க விண்ணுலகிலிருந்து மண்ணுலகுக்கு வந்த தேவதை’ என ராணுவ வீரர்கள் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேலைக் கௌரவித்தனர். அதனால்தான் அவர் `கைவிளக்கு ஏந்திய காரிகை’ என அழைக்கப்பட்டார். அவர் பிறந்த மே 12-ம் நாளே உலக செவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

உலகின் மகத்தான பணியான செவிலியர் பணியை ஆற்றுவது சாதாரண விஷயம் அல்ல. இந்தப் பணியை ஆற்றுவதற்கு ஒருவர் மனதாலும் உடலாலும் வலிமை மிக்கவராகவும், பொறுமை, சகிப்புத்தன்மை, கருணை, நேர்மை, இன்சொல் போன்ற நற்குணங்களை உடையவராகவும், எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் பணியாற்றும் தன்மை நிறைந்தவராகவும் இருக்க வேண்டும். 

மனம் சோர்ந்து காணப்படும் நோயாளிகளை ஆற்றுப்படுத்துதல், காலம் நேரம் பாராமல் நோயாளிகளுக்கான சேவைகளை மனம் கோணாமல் செய்தல், நோயாளிகள் உள்ள இடங்களை சுத்தமாக வைத்திருப்பதில் பொறுப்பாக இருத்தல், அருவருப்பற்று நோயாளிகளைக் கவனித்தல் போன்ற பல்வேறு கடமைகளை செவிலியர்கள் ஆற்றுகின்றனர். இந்த செவிலியர்களின் உன்னதமான பணியை கொரோனா தொற்றுக் காலத்தில் நாம் கண்கூடாகப்  பார்க்க முடிந்தது. தமக்கும் குடும்பம் இருந்தாலும், உயிருக்கு ஆபத்தான சூழலிலும் பணியில் பின்வாங்காமல், நோய்வாய்ப்பட்ட மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தமது உயிரையே பணயம் வைத்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

“ஆனால், இந்தளவுக்குத் தொண்டுள்ளத்தோடு பணிபுரிந்தும் நாங்கள் பல விதங்களில் பாதிக்கப்பட்டு பல இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை’’ என்கிறார்கள் செவிலியர்கள் பலர்.

செவிலியர் | மாதிரிப்படம்

மனக்குமுறல்களுடன் இருந்த செவிலியர்கள் பலரிடம் பேசினோம். “மருத்துவர்களின் சாதனைகள் பேசப்படும்  இந்த  நாட்டில் எத்தனை செவிலியர்களின் சாதனைகள் பேசப்பட்டிருக்கின்றன? வரலாறே இல்லாத ஒரு துறையாக ஏன் இத்துறை ஆக்கப்பட்டது? அதிகாரமற்ற துறை என்பதால், இத்துறை இத்தனை ஆண்டுகளில் இழந்தவை ஏராளம். இங்கு எல்லா கோர்ஸ்களையும் பொறுத்தவரை, தனியார் கல்லூரிகளில் பட்டம் பெறுபவர்கள் அரசுப் பணிக்குத் தகுதியுடையவர்கள். ஆனால், தனியார் கல்லூரிகளில் படித்த செவிலியர்க்கு அரசு வேலை 2008 வரை மறுக்கப்பட்டது. நீதிமன்றப் போராட்டத் துக்குப் பிறகுதான் அவர்களுக்கு அரசு வேலை என்ற உரிமை கிடைத்தது.

அரசு வேலைக்குப் பணியமர்த்தலில் தேர்வு முறை (MRB) உண்டு. தேர்வெழுதிப் பணிக்கு அமர்த்தப்படும் ஒவ்வொரு செவிலியரும் நிரந்தரப் பணியாளர் எனும் நீதிமன்ற ஆணை உள்ளது. ஆனாலும், ஒப்பந்தம் போட்டு 2 ஆண்டுகளுக்குக் கையொப்பம் வாங்கி 6 ஆண்டுகள் வெறும் ரூ.14,000 சம்பளத்துக்குக் கொத்தடிமைகள்போல் வேலை வாங்கியது முந்தைய அ.தி.மு.க அரசு. தற்போதும் தேசிய ஊரக வளர்ச்சி சார்ந்த செவிலியர் களுக்கு மட்டுமே ரூ.18,000 வழங்கப்படுகிறது. சுமார் 15,000 செவிலியர்களின் நிலை இன்னும் அதே கொத்தடிமை நிலைதான்.

செவிலியர்கள் | மாதிரிப்படம்

மலேசியா, துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் செவிலியர்களுக்குப் பணி நேரம் ஒரு நாளுக்கு 7 – 8 மணி நேரம். வேலை நேரம் மூன்று ஷிஃப்ட்களாகப் பிரிக்கப்படுகிறது. இரவுப் பணி ஒரு வாரத்தில் 3 நாள்களும் அதற்கு விடுமுறையாக 4 நாள்களும் கொடுக்கப்படுகின்றன. இந்த விடுமுறையில் வேலை செய்வோர்க்குக் கூடுதல் சம்பளம் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் 7 – 8 மணி நேரம் என்பது விடுவிக்க ஆள்கள் வரும் வரை மேலும் நீள்கிறது. அது சில நேரங்களில் 36 மணி நேரமாகக்கூட இருப்பதாகப் பல செவிலியர்கள் வருந்துகின்றனர். இந்தக் கூடுதல் வேலை நேரத்துக்கு இங்கு விடுப்போ, சம்பளமோ கிடைப்பதில்லை. கொடுக்கப்பட வேண்டும் எனும் சட்டம் வெறும் சம்பிரதாயமாக மட்டுமே இருக்கிறது. 7 நாள்கள் இரவுப் பணி செய்தால் ஒரு நாள் விடுமுறை கொடுக்கப்படுகிறது. 

பணி சார்ந்த பிரச்னை ஒருபுறமென்றால் பாலியல் தொல்லை மறுபுறம். பல செவிலியர்கள் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டும் வெளியில் சொல்ல முடியாமல் விம்மித் தவிக்கிறார்கள். நோயாளிகள் முன்பு திட்டுதல், தூய்மைத் தொழிலாளர்களின் பணியை பங்கு போட்டுக்கொண்டு பார்த்தல் எனப் பல இன்னல்கள். பல ஆரம்ப சுகாதார மருத்துவமனை களில் முறையான மருத்துவ உபகரணங்கள் கிடையாது. ஜெனரேட்டர் வசதி கிடையாது. இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டால்கூட செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில்தான் மருத்துவம் பார்க்க வேண்டியிருக்கிறது.

செவிலியர் | மாதிரிப்படம்

மருத்துவ உபகரணங்களுக்கு பேட்டரி செல்கள்,  பேப்பர், ரெக்கார்டு நோட்புக் என அனைத்துக்கும் சொந்தப் பணத்தையே செலவிட வேண்டியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக செவிலியர்கள் மீது இருந்த மரியாதை துளியும் இல்லை.    செவிலியம் என்பது சேவைத் துறை மட்டுமல்ல. கடந்த தலைமுறைப் பெண்களைச் சொந்தக் காலில் நிற்கச் செய்த சுயமரியாதைத் துறையும்கூட. செவிலியர்களுக்கும் மனம் உண்டு. குடும்பம் உண்டு. வாழ்க்கை உண்டு. செவிலியர்கள் மதிக்கப்பட வேண்டும். பணிப்பாதுகாப்பு, சம வேலை, முறையான ஊதியம் அளிக்கப்பட வேண்டும். இந்த ஆட்சியாவது செவிலியர்களின் குரலுக்குச் செவி மடுக்குமா?” என்றனர் தீர்வுகளை எதிர்பார்த்து.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com