வேலை மட்டும் தான் யாவுமா? | My Vikatan | My Vikatan article about working women

Share

எவ்வளவு சம்பாதித்தாலும் செலவும் ஆகிறது என்பதும் ஆச்சர்யமான உண்மை. அது ஓர் ஆயிரம் என்றாலும் சரி பல ஆயிரம் என்றாலும் சரி மாத கடைசியில் எல்லோர் நிலையும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.

பொருளாதாரத்தை என்ன செய்தாலும் திருப்திப் படுத்த இயலாது தான். ஆனால் இந்த வேலை நமக்கான தனி அடையாளம் மக்களோடு கலந்து பணிபுரிய நமக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாயிற்றே

எனினும் அவ்வப்போது வீட்டில் இருக்கும் என் அம்மாவை பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கும். எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார். பிடித்ததை செய்கிறார். ஒவ்வொரு சின்ன சின்ன விஷேசங்களிலும் கலந்து கொள்வார். பிடித்த நேரத்தில் கோவில்களுக்கு சென்று வருவார். தோன்றும் பொழுது உண்ணுவார் உறங்குவார். வீட்டை நன்கு பராமரிப்பார். மற்றவர்களுக்காக நேரம் ஒதுக்குவார்.

எனக்கோ சென்ற வாரம் ஊர் பண்டிகைக்குக் கூட விடுமுறை கிடைக்கவில்லை. ஐந்து நாள் பண்டிகைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை பெறுவது கூட கடினமாக இருந்தது.

சிறு பிள்ளையாய் இருக்கும் பொழுது இந்த மாதிரி பண்டிகை காலங்களுக்காக காத்திருந்து கொண்டாடுவது தானே பெரும் மகிழ்ச்சியாய் இருந்தது.

நாம் இப்பொழுது அந்த மகிழ்ச்சியை விட்டுக் கொடுக்க பழகி விட்டோமா! அல்லது இப்பொழுது நமக்கு அது பெரிய மகிழ்ச்சியாக இல்லையா! அல்லது அதற்கெல்லாம் நேரம் ஒதுக்க நமக்கு சுதந்திரம் இல்லையா!

நம் பெற்றோர்களின் நம்மை சார்ந்தவர்களின் மருத்துவச் செலவை நாமே செய்யும்பொழுது பாரதியின் ‘நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெரிகளும்’ நினைவுக்கு வந்தாலும் அவர்களுடன் இருந்து அவர்களை கவனித்துக் கொள்ள முடிவதில்லையே. பணம் செலவழிக்க முடிந்த அளவிற்கு அவர்களுடன் நேரத்தை செலவு செய்ய முடிவதில்லையே!

தன் உடல் நிலையையும் பார்த்துக் கொள்ள நேரம் கிடைப்பதில்லை. எந்த ஒரு வலி என்றாலும் அதை சமாளித்துக் கொண்டே செல்ல வேண்டி வருகிறது. சில நேரங்களில் விடுப்பு எடுத்துக் கொண்டாலும் பல நேரங்களில் விடுமுறைக்காக காத்திருந்து மருத்துவரிடம் செல்ல வேண்டியிருக்கிறது. அப்படி நம் உடல் நிலையும் மறந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோமா!

வேலையை தாண்டி வேறு ஏதாவது செய்ய வேண்டும்.. புதுப் புது இடத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும்.. வேறு ஏதாவது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும்.. வேறு துறைகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் கூட தோன்றும். அதற்கும் நேரம் கிடைக்க வேண்டுமே!

நேரம் இல்லையே என்று ஒரு பக்கம் தோன்றினாலும் இன்னொரு பக்கம் வீட்டிலேயே எப்பொழுதும் இருக்கவும் முடியாது. பத்து நாட்கள் விடுமுறை கிடைத்தாலே எப்பொழுது மீண்டும் வேலைக்குச் செல்வோம் என்று தோன்றிவிடும். அப்படியென்றால் நாம் தான் வாழ்க்கையை திட்டமிட்டு சமநிலையில் கொண்டு செல்ல வேண்டுமா! ஆனால் அதுதான் இந்த காலச் சூழலில் கடினமாக இருக்கிறது.

போராடி பெற்றிருக்கும் வேலை எனினும் நம் வேலைக்காக அவ்வப்போது ஆரோக்கியத்தை சின்ன சின்ன ஆசைகளை சொந்தங்களை இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையை விட்டுக் கொடுத்து போகிறோமோ என்கின்ற ஏக்க பதிவே இது.

– ரேவதி பாலாஜி

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com