பெரம்பூர்: திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, சென்னை புளியந்தோப்பில், ‘‘மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாள்’’ என்ற தலைப்பில் 73(அ) வட்ட திமுக செயலாளர் கே.சுரேஷ்குமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்தொல்.திருமாவளவன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்.குமார், கலாநிதி வீராசாமி எம்.பி, திருவிக.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தாயகம் கவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசியதாவது; 4 வது தலைமுறையாக திராவிட இயக்கத்துக்கு தலைமை தாங்குகிறார் முதல்வர் ஸ்டாலின். அடுத்து அகில இந்திய அளவில் தலைமை தாங்க போகிறார். சனாதன சக்திகளை முதல்வர் மு.க.ஸ்டாலினால்தான் வீழ்த்த முடியும். வேறு எந்த மாநிலத்திலும் சமூக நீதி என்ற குரல் கேட்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே இந்த குரல் கேட்கிறது. பெரியார் என்ற ஒருவரால்தான் இந்தி தமிழ்நாட்டில் நுழையவில்லை. மோடியின் வித்தை எடுபடவில்லை. தமிழ்நாட்டு மக்களை மோடியால் ஏமாற்ற முடியாது. ஏனென்றால் திராவிட இயக்கத்தால் பக்குவப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டு மக்கள் யாரும் ஏமாற மாட்டார்கள். சில சில்லறைகளை வைத்துக்கொண்டு சின்னமலை, பெரிய மலைகளை வைத்துக்கொண்டு கூச்சல் போட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் கூவ முடியும், கூச்சல் போட முடியும், தமிழ் மண்ணை அவர்களால் ஒருபோதும் சிதைக்க முடியாது.
இந்தியாவை காக்கக் கூடிய ஒரே ஆற்றல்மிக்க தலைவராக ஸ்டாலின் உள்ளார். நீங்கள் தமிழ்நாட்டிற்குள் சுருங்கி விட வேண்டாம். அகில இந்திய பார்வை பெறவேண்டும். அகில இந்திய அளவில் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும். அகில இந்திய அளவில் சனாதன சக்திகளை எதிர்க்கும் தலைவர். நீங்கள் ஒரு அரசியல் பாரம்பரியம் உள்ள தலைமை. நீங்கள் அந்த புரிதலோடு வெகுவீச்சாக தேசிய அளவிலான அரசியலில் ஈடுபட வேண்டும். ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கின்ற ஒரு மகத்தான ஆற்றல்தான் திமுக தலைவர் ஸ்டாலின். அவர் பின்னால் எப்போதும் நாங்கள் இருப்போம். இவ்வாறு பேசினார்.