சென்னை: பாஜ கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் பொன்.கந்தசாமி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனால் மாநில தலைவர் அண்ணாமலை அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் உள்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சசிகலா, டிடிவி.தினகரன், ஓபிஎஸ் என அடுத்தடுத்த பிளவுகளை அதிமுக சந்தித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் கூட்டணி கட்சியான பாஜவின் மூத்த நிர்வாகிகள் ஒன்றன் பின் ஒன்றாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். பாஜ ஐடி பிரிவு மாநில தலைவர் சிடிஆர்.நிர்மல்குமார், பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து விட்டு பாஜவில் இணைந்தார். இதன் காரணமாக பாஜ-அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அண்ணாமலை அறிவித்தார்.
இதையடுத்து பாஜ தேசிய தலைவர்களை சந்தித்து தனது கருத்தையும் அண்ணாமலை தெரிவித்தார்.
ஆனால் டெல்லியில் 2 நாட்களுக்கு முன் பேட்டி அளித்த அமித்ஷா அதிமுகவுடன் தான் தமிழகத்தில் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறினார். இந்நிலையில் மீண்டும் பாஜவில் மாநில பொறுப்பில் உள்ளவரை அதிமுக தலைமை தங்கள் அணிக்கு இழுத்துள்ளது. தற்போது பாஜ கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் பொன்.கந்தசாமி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தார். இது பாஜவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மாநில தலைவர் அண்ணாமலை அதிர்ச்சி அடைந்துள்ளார்.