அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் துவக்க விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, மாற்றம் செய்யப்பட்ட மினி ரதத்தில் மைதானத்திற்குள் வந்து மாஸ் என்ட்ரி கொடுத்தார். அதற்கு முன்னர் நடிகைகள் ராஷ்மிகா மற்றும் தமன்னா ஆகியோர் சினிமா பாடல்களுக்கு அசத்தல் நடனமாடி இருந்தனர்.
16-வது ஐபிஎல் சீசன் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி உள்ளது. அதிர்வேட்டுகள் முழங்க, சுமார் 1.32 லட்சம் பார்வையாளர்கள் முன்னிலையில் முதல் லீக் போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் ஐபிஎல் கோப்பையுடன் உற்சாக போஸ் கொடுத்தனர்.
அதற்கு முன்னர் தொடக்க விழாவை முன்னிட்டு தமன்னா, ராஷ்மிகா ஆகியோர் நடனமாடி இருந்தனர். தொடர்ந்து மாடிஃபை செய்யப்பட்ட வாகனத்தில் நின்றபடி மைதானத்திற்குள் என்ட்ரி கொடுத்தார் தோனி. அப்போது மைதானம் முழுவதும் ‘தோனி, தோனி’ என்ற முழக்கம் ஒலித்தது. ‘கிரவுண்டு மொத்தம் உன் ஆளுங்க இருக்கலாம். ஆனா ஆடியன்ஸ் எல்லாரும் ஒருத்தன மட்டும்தான் பாப்பாங்க. ஆட்ட நாயகன்’ என்ற வசனத்தை அந்த காட்சிகள் நினைவுப்படுத்துகிறது. அந்த அளவுக்கு தோனிக்கான ஆதரவு மைதானத்தில் பார்வையாளர்கள் மத்தியில் உள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.