
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
கோவையைச் சேர்ந்த 24 வயதான ஷர்மிளா பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய லட்சியமாகக் கொண்டிருந்தார். அந்தக் கனவு தற்போது நிறைவேறியுள்ளது.
“டயர் சைஸ் கூட இல்ல, உனக்கு பேருந்து ஓட்டணுமா?” என்று கேட்டவர்கள் முன்பு இன்று கெத்தாக பேருந்து ஓட்டுகிறார் ஷர்மிளா.
ஆட்டோ ஓட்டுநரின் மகளான அவர் ஃபார்மசி பிரிவில் டிப்ளமோ முடித்துள்ளார்.
முழு நேரமாக ஆட்டோ ஓட்டுநராக இருந்த ஷர்மிளா, கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதைத் தன்னுடைய கனவாகக் கொண்டிருந்தார். தனது கனவை அடைவதற்கான பாதையில் பயணித்து, பேருந்து ஓட்டுவதற்கான பயிற்சி பெற்று அதற்கான உரிமமும் பெற்றுள்ளார்.
ஆண்கள் மட்டுமே அதிகம் கோலோச்சும் கனரக வாகன ஓட்டுநர் பணியில் தனக்கான முத்திரையைப் பதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார் ஷர்மிளா.
“ஓட்டுநர் என்கிற பணியை இழிவாகப் பார்க்கும் கண்ணோட்டம் இங்கு இருக்கிறது. என் தந்தை ஆட்டோ ஓட்டுநர் என்பதில் எனக்குப் பெருமை தான். அதனால்தான் ஓட்டுநர் பணியை முழு நேர வேலையாகத் தேர்வு செய்தேன்,” என்கிறார் ஷர்மிளா.
கடந்த மூன்று ஆண்டுகளாக முழு நேரமாக ஆட்டோ ஓட்டி வரும் ஷர்மிளாவுக்கு பேருந்து ஓட்ட வேண்டும் என்கிற ஆசை வந்தது. அதை அவர் மனதில் விதைத்ததில் அவரது தந்தை மகேஷ் முக்கியப் பங்கு வகித்தார் என்கிறார் ஷர்மிளா.
“எந்தத் துறையாக இருந்தாலும் நீ அதில் என்னை விட ஒரு படி மேல இருக்கணும். அதனால் தைரியமாக பேருந்து ஓட்ட கத்துக்க’ என்று அப்பா என்னிடம் சொன்னார்,” என்கிறார் ஷர்மிளா.
நான்கு மாதங்களுக்கு முன்பு கனரக வாகனங்களை இயக்குவதற்கான உரிமத்தை அவர் பெற்றார். ஆனாலும் அவருக்கு பேருந்து ஓட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தபோதும் தொடர்ந்து பயிற்சி எடுத்து வந்தார்.
இந்நிலையில் பேருந்து இயக்கும் வாய்ப்பு ஷர்மிளாவை தேடி வந்துள்ளது.
கனரக வாகன ஓட்டுநராக வேண்டுமென்ற கனவோடு போராடிய ஷர்மிளாவின் பாதை இனி அவருடைய வார்த்தைகளில்…
“நான் பயணிகள் ஆட்டோவை வாடகைக்கு ஓட்டிக் கொண்டிருந்தேன். என் அப்பா சிலிண்டர் ஆட்டோ ஓட்டி வருகிறார். வாடகை இல்லாத நாட்களில் அவருடன் சிலிண்டர் ஆட்டோ ஓட்டச் செல்வேன்.
டிரைவர் என்றாலே சமூகத்தில் பலரும் முகச் சுழிப்புடன் தான் பார்ப்பார்கள். என் அப்பா டிரைவர்தான். அதனால் எல்லாரையும் படிக்க வைக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார். ஆனால் எனக்கு எந்த வேலையை எல்லோரும் குறைவாகப் பார்த்தார்களோ அதன் மீதுதான் ஆர்வம் அதிகரித்தது.
ஏழாம் வகுப்பு படிக்கும்போதிருந்தே எனக்கு டிரைவிங் மீது ஆர்வம் வந்துவிட்டது. அப்போதே அப்பாவின் ஆட்டோவை எடுத்து ஓட்டுவதற்குப் பழகினேன். அப்படித்தான் எனக்கு இதன் மீது ஈடுபாடு வந்தது.
வேலை என வந்தபோது உனக்கு எதில் விருப்பமோ அதைச் செய் என வீட்டில் கூறிவிட்டார்கள். அப்போதுதான் ’எனக்கு டிரைவிங்ல ஆசை இருக்கு, டிரைவர்னாலே ரொம்ப கேவலமா பார்க்குறாங்க, எனக்கு அந்தப் பார்வை மேல நம்பிக்கையே இல்லைனு’ கூறி டிரைவிங்கை என்னுடைய துறையாகத் தேர்வு செய்தேன்.
அப்பா முதலில் தயங்கினார். நாளை உன்னையும் கேவலமாகப் பார்க்க மாட்டார்களா என அவர் கேட்டபோது, ‘அந்த எண்ணத்தை மாத்துறதுதான் என் முடிவுனு சொன்னதும் புரிந்துகொண்டு உறுதுணையாக இருந்தார்கள்.
தொடக்கத்தில் அப்பாவுடன் ஆட்டோ ஓட்டுவதற்குச் சென்று பழகிக் கொண்டேன். என் குடும்பம், நண்பர்கள் என அனைவருமே பக்கபலமாக இருந்தார்கள். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தேன்.
பெண்கள் பல ஊர்களில் பேருந்து ஓட்டியுள்ளார்கள். ஆனால் கோவையில் விசாரித்த வரை அப்படி யாரும் இல்லை. உனக்கு டிரைவிங்கில் சாதிக்க வேண்டுமென்றால் பேருந்து ஓட்டு என முதன்முதலில் அப்பாதான் எனக்கு அந்த ஆர்வத்தை விதைத்தார். நான் கனரக வாகன உரிமம் பெறுவதற்கும் அப்பாதான் முழு காரணம்.
‘நீ சாதிக்கனும்னு முடிவு பண்ணிட்டனா சாதிச்சிரு, கோயம்புத்தூர்ல என் பொண்ணுதான் முதல் பெண் பஸ் டிரைவர்னு நான் பெருமையா சொல்லிக்குவேன். ஆயிரம் பேர் ஆயிரம் விதமா பேசுறத அதுக்கு அப்புறம் பாத்துக்கலாம்னு’ என் அப்பா ரொம்ப பக்கபலமா இருந்தாங்க.
நான் சின்ன வயதிலிருந்து இருந்து பேருந்தில் பயணம் செய்தது குறைவு. எந்த இடத்துக்கு போனாலும் ஆட்டோவிலே அப்பா அழைத்துச் சென்று வந்துவிடுவார். சின்ன வயதில் பேருந்து என்பது அந்நியமாக இருந்ததும் அதன் மீது ஈர்ப்பு வர ஒரு முக்கிய காரணம்.
அதோடு அப்பாவின் உந்துதலும்தான் ஆட்டோவிலிருந்து பேருந்து பக்கம் என்னைத் திரும்ப வைத்தது. ‘இந்த காக்கி சட்டையை போட்டதுக்குப் பிறகு முடியாததுனு எதுவுமே இல்லைனு, அப்பா சொன்ன ஒரு வரியை எப்பவுமே நினைத்துக் கொள்வேன்.
அதன்பிறகு பேருந்து பயிற்சிக்குச் சென்றேன். அப்பா வேலைக்குச் செல்வதால் ஓட்டுநர் பயிற்சிக்கு செல்லும்போதெல்லாம் அம்மா தான் என்னுடன் அனைத்து இடங்களுக்கும் வருவார். டிரைவிங் மீது இருந்த ஈடுபாட்டால் பேருந்து ஓட்ட எளிதாகப் பழகிக்கொள்ள முடிந்தது.
பயிற்சிகளை முடித்து நான்கு மாதங்களுக்கு முன்பு பேருந்து உரிமம் பெற்றுவிட்டேன். பேருந்து ஓட்டும் பயிற்சிக்குச் செல்ல ஆரம்பித்தபோது நகைப்புடன் ஏளனமாகப் பார்த்தவர்கள் எல்லாம் இன்று வியப்பாகப் பார்க்கிறார்கள்.
என் அப்பா நான் எந்தத் துறையாக இருந்தாலும் அவரைவிட ஒரு படி மேல இருக்க வேண்டும் என விரும்பினார். நான் கனரக உரிமம் வாங்கியதற்கு அதுவும் ஒரு முக்கியமான காரணம். தற்போது என்னால் பயணியர் பேருந்துகளை இயக்க முடியும். நானும் ஒரு பஸ் டிரைவர்.
உரிமம் பெற்ற உடன் பேருந்து இயக்க அனுமதி வேண்டும் என நான் கேட்கச் சென்றேன். அப்போது அந்தச் செய்தி பரவலாக வந்திருந்தது. ஆனால் பேருந்து இயக்குவதற்கான அனுமதி கிடைக்கத் தாமதமாகும் என்றார்கள்.
பேருந்து இயக்க அனுமதி கேட்டுச் சென்றால் திறமையை வைத்து அல்லாமல் உயரத்தை வைத்து மதிப்பிட்டார்கள். ’எலிக்குட்டி மாதிரி இருக்க நீ பஸ்ஸெல்லாம் ஓட்டிருவியா, டயர் சைஸ் தான் இருக்க உனக்கு பஸ் வேணுமா’ என்றுகூட என்னிடம் கேட்டிருக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால்தான் எவராலும் அடுத்த நிலைக்கு வரமுடியும்.
பிறகு ஆட்டோ ஓட்டிக் கொண்டே பேருந்து இயக்கும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தேன். என் ஆசையெல்லாம் பேருந்தில் என் அம்மா அப்பாவை ஏற்றிக் கொண்டு கெத்தாக வந்து நிற்க வேண்டும். எங்கள் ஊரான கோவையில் முதல் பெண் பேருந்து டிரைவராக வேண்டும் என்பதுதான்.
தமிழ்நாட்டில் பெண் கனரக வாகன ஓட்டுநர்கள் உள்ளார்கள். கேரளாவிலும்கூட இருக்கிறார்கள். ஆனால் கோவையில் பேருந்து ஓட்டும் பெண் யாரும் இல்லை. அந்தப் பெருமை எனக்கு கிடைக்க வேண்டும் என்று என் குடும்பம் ஆசைப்பட்டது. அது இன்று நிறைவேறியுள்ளது.
முதல் கட்ட முயற்சியில் யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை, அது மட்டுமில்லாமல் இழிவுபடுத்தும் விதமாகவும் பேசினார்கள். அதனால் அடுத்து எந்த வாய்ப்பையும் தேடி செல்லவில்லை. அதேநேரம் பயிற்சி பள்ளி வாகனத்தின் மூலம் தொடர்ந்து பயிற்சியும் மேற்கொண்டு வந்தேன்.”
கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வரை செல்லும் வீவீ டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் தனியார் பேருந்தை இன்று முதல் ஓட்டுகிறார் ஷர்மிளா.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய ஷர்மிளா, “என் கனவு நினைவாகியுள்ளது. இந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. இவ்வளவு விரைவாகப் பேருந்து இயக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை.
இந்த வாய்ப்பிற்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. என் குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. பெண்களுக்கு இந்த வேலை ஒத்து வராது, இது பெண்களுக்கான இடம் கிடையாது என்கிற எண்ணத்தை மாற்ற முடிந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்று கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஆகிவிட்டேன்,” என்று குரலோடு சேர்த்து அவரும் குதூகலிக்கப் பேசினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: