பாரிஸ்: கிலியன் எம்பாப்பே பிராச்ன்ஸ் நாட்டு கால்பந்து அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ் எம்பாப்பேவை பிரான்ஸ் அணியின் கேப்டனாக நியமித்தார். இதற்கு முன்னதாக கேப்டனாக இருந்த ஹியூகோ லோரிஸ் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் அந்தப் பதவிக்கு 24 வயதான எம்பாப்பே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2018 உலகக் கோப்பையை பிரான்ஸ் வென்றதிலிருந்து எம்பாப்பே ஏராளமான ரசிகர்களை வென்று நட்சத்திர வீரராக இருக்கிறார். அதுவும் கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் எம்பாப்பே அதிக கவனம் பெற்ற வீரராக இருக்கிறார்.
காரணம் அந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் எம்பாப்பே காட்டிய அசாத்திய திறமை. போட்டியில் என்னவோமெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி தான் பட்டம் வென்றது. அது அவர்களுக்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த பட்டம். ஆனாலும் மெஸ்ஸியை மிரளவைத்தார் எம்பாப்பே.
பிரான்ஸ் – அர்ஜென்டினா இடையேயான இறுதிப் போட்டியின் முதல் பாதியில் அர்ஜென்டினா முழு ஆதிக்கம் செலுத்திய நிலையில், இரண்டாம் பாதியில் பிரான்ஸின் நட்சத்திர வீரர் எம்பாப்பே கடைசி நிமிடங்களில் சிறப்பாக விளையாடி 3 -3 என்ற கோல் கணக்கில் போட்டியை சமன் செய்தார்.எனினும் பெனால்டி ஷுட் அவுட்டில் அர்ஜென்டினா வென்றது. இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கு ரசிகர்களின் பாராட்டுகள் எந்த அளவுக்கு குவிந்ததோ, அதே அளவிலான பாராட்டு எம்பாப்பேவுக்கும் கிடைத்தது. இதனால் கத்தார் உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றிருந்தாலும் கூட கவனம் பெற்றவர் என்னவோ இந்த எம்பாப்பே தான்.
இந்நிலையில் இப்போது எம்பாப்பேவை பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டனாக அறிவித்துள்ளார் பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ். இதனை பிரான்ஸ் ஃபுட்பால் ஃபெடரேஷனும் உறுதி செய்துள்ளது.