சென்னை: வெகுவிரைவில் ஐபிஎல் 2023 சீசன் துவங்க உள்ளது. அதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இதில் அந்த அணியின் கேப்டன் தோனியும் அடங்குவார். நாளை இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் டக்-அவுட்டில் தோனி அமர்ந்திருக்கும் படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
அந்த பதிவுக்கு “Main pal do pal ka shayar hoon..” என இந்தி மொழியில் கேப்ஷன் கொடுத்துள்ளார் அந்த அணியின் சமூக வலைதள பக்கங்களை கையாளும் அட்மின். வழக்கமாக அன்புடன், விசில்போடு, Yellove என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்தான் சென்னை அணி பதிவுகளை பகிரும். இந்நிலையில், இந்தியில் பகிர்ந்துள்ளதை பார்த்து அந்த மொழி அறியாத ரசிகர்கள் திகைத்துள்ளனர். சிலர் வெளிப்படையாகவே என்ன சொல்ல வருகிறீர்கள் என கேட்டுள்ளனர். இந்தி தெரிந்த ரசிகர்கள் தங்கள் கமெண்ட்களை அந்த பதிவில் பகிர்ந்து வருவதையும் பார்க்க முடிகிறது.
“Main pal do pal ka shayar hoon..” என்றால் என்ன என இந்தி தெரிந்த நபரிடம் கேட்டதில் “ஒவ்வொரு நொடிக்கும் கவிஞன் நான். ஒவ்வொரு நொடியும் என் கதையே” என தெரிவித்தார். இது பாலிவுட் சினிமா நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ள படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் எனவும் தெரிகிறது. உலக கவிதை தினம் என்பதை இந்த பதிவை கவித்துவமாக சொல்ல நினைத்து சிஎஸ்கே அட்மின் இப்படி செய்திருக்க வாய்ப்புள்ளது. என்ன அதை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அனைவருக்கும் புரியும் வகையில் செய்திருக்கலாம்.
நாளைய போட்டியின் போது தோனி ஆட்டத்தை பார்க்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இது அவரது கடைசி ஐபிஎல் சீசனா? அவர் ஓய்வு பெற உள்ளாரா? என்ற கேள்வியும் ஒருபுறம் எழுந்துள்ளது.