“பழைய சோறு, நீராகாரம், பச்சை மிளகாய்ங்க!'’ – மூன்று இளைஞர் களின் அசத்தல் தொழில் முயற்சி

Share

இன்று நம் பாரம்பர்ய உணவுகள் பலவற்றை மறந்து வருகிறோம். கஞ்சி, கூழ், களியெல்லாம் மறைந்துகொண்டே வருகின்றன. `நாங்கயெல்லாம் அந்தக் காலத்துல காலையில வயிறு குளிர கஞ்சியக் குடிச்சிட்டுத்தான், தெம்போட காட்டு வேலைக்குக் கிளம்பிப் போவோம்’ என்ற நம் வீட்டுப் பெரியவர்கள் சொல்லும் கதைகளில்தான் இங்கு பெரும்பாலான வீடுகளில் கஞ்சி இருக்கிறது.

இந்நிலையில், பழைய சோற்றை வைத்து ஒரு பிசினஸ் ஐடியாவை யோசித்து, அதில் வெற்றி நோக்கியும் நகர்ந்திருக்கிறார்கள் மூன்று இளைஞர்கள்.

பழைய சோறு உண்ணும் கஸ்டமர்கள்

கரூர், தான்தோன்றிமலையைச் சேர்ந்த சரவணன், முத்துசாமி மற்றும் ஜெகதீஷ் என்ற மூன்று நண்பர்கள் இணைந்து, பழைய சோறு, நீராகாரம் என்று நம் பாரம்பர்ய உண்வைத் தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

கரூர் ஆட்சியர் அலுவலக வாசலுக்கு அருகில் தென்பகுதியில், கடந்த 13 நாள்களாக இந்த உணவு விற்பனையை செய்து வருகின்றனர். நண்பர்களான இவர்கள் மூவரும் இந்தப் புது முயற்சியை கரூரில் அரங்கேற்றியிருக்கிறார்கள். அந்தக் கடையைப் பற்றிக் கேள்விப்பட்ட நாம், அங்கு ஒரு விசிட் அடித்தோம்.

நமக்கு ஒரு சொம்பில் பழைய சாதம், மற்றொரு சொம்பில் நீராகாரம், தொட்டுக்கொள்ள சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் என்று தந்தனர். சாப்பிட்டபோது, சுவை, குளிர்ச்சியில் சொக்கிப் போனோம்.

முத்துசாமி

முதலில் நம்மிடம் பேசிய முத்துசாமி, “நாங்க மூணு பேரும் தான்தோன்றிமலைதான். சின்ன வயசிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். நான் ப்ளஸ் டூ வரை படிச்சிருக்கேன். ஒரு ஃபைனான்ஸ்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். அதேபோல, ஜெகதீஷூம் ப்ளஸ் டூ முடிச்சிட்டு ஒரு ஃபைனான்ஸ்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்தார். சரவணன் ஐ.டி.ஐ படிச்சுக்கிட்டு, கம்ப்யூட்டர் ஹார்டுவேர் சர்வீஸ் பண்ற தொழில் பண்ணிக்கிட்டு இருந்தார்.

மூணு பேருக்கும் திருமணமாகி, குழந்தைங்க இருக்காங்க. ஆனா, மூணு பேரும் பொருளாதார நிலையில் ரொம்ப கஷ்டமான சூழலில் இருந்தோம். அப்போதான், சில நாள்களுக்கு முன்னாடி, மூணு பேரும் சேர்ந்து, `மூணு பேருக்கும் பெரிசா வருமானமில்லை. இப்படியே போனா, சரியிருக்காது. ஏதாச்சும் சொந்தமா பிசினஸ் பண்ணுவோம்’னு முடிவு பண்ணினோம். என்ன தொழில் பண்ணலாம்னு பேசினப்போதான், உணவு சம்பந்தப்பட்ட ஏதாச்சும் தொழில் தொடங்கணும்னு மூணு பேரும் ஒரே நேர்கோட்டுல யோசிச்சோம். கூகுள்ல என்ன உணவை தொழிலா பண்ணலாம்னு சர்ச் பண்ணினப்ப, ஒரு சொம்பு நீராகாரம் ரூ.250னு போட்டிருந்துச்சு. `நாம ஏன் சொம்பு நீராகாரம் 10 ரூபாய்க்குத் தரமா தரக்கூடாது?’னு தோணுச்சு.

பழைய சோறு

பழைய சோற்றை ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ஏகப்பட்ட விலைக்கு விற்பதையும் தெரிஞ்சுகிட்டோம். உடனே மூணு பேரும் வேலையை விட்டு, ஐடியா பண்ணின மூணாவது நாளே ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்னாடி தள்ளுவண்டியில, `பழைய சோறு, பச்சை மிளகாய்’ங்கிற பேர்ல கடையை ஆரம்பிச்சுட்டோம்.

முதல் ரெண்டு நாள் கூட்டம் வரலை. பிறகு, இங்க வந்து சாப்பிட்டுப் போய் சொன்னவங்க சொல்லிச் சொல்லி, நிறைய பேர் சாப்பிட வர ஆரம்பிச்சாங்க. 13 நாள்தான் ஆவுது. இப்போ, தினமும் 60 பேர் வரை குறையாம வர்றாங்க. காலையில 9.30 மணிக்குத் தொடங்கி, மாலை 4 மணி வரை விற்பனை பண்றோம்” என்றார்.

அடுத்து பேசிய, சரவணன், “பொன்னி அரிசி குருணையில் வேகவைத்த சோற்றை தனியா பானையில் முதல்நாள் இரவே ஊற வெச்சிடுவோம். அதேபோல், கம்மஞ்சோற்றையும் தனி பானையில தண்ணீர் ஊற்றி ஊறவெச்சிடுவோம். மறுநாள் காலையில பொன்னி குருணை அரிசிப் பானையில இருந்து நீராகாரத்தை வடிச்சு எடுத்து, அதில் கொஞ்சம்போல் மோரை கலக்குவோம். பழைய சோறு கேட்பவர்களுக்கு ஒரு சொம்பில் முக்கால் பங்கு பொன்னி அரிசி சாதம், மீதமுள்ள அளவுக்கு கம்பஞ்சோற்றை கலந்து, சாப்பிடக் கொடுக்குறோம்.

நீராகாரம்

கூடவே, மற்றொரு சொம்பில் நீராகாரத்தை பருக கொடுக்கிறோம். தொட்டுக்கொள்ள கொத்தவரை, சுண்டக்காய் வத்தல், மாங்காய், அப்பளம், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் என்று ஆறுவகையான சைடிஷை கொடுக்கிறோம். எங்களுக்கும் இதுதான் சாப்பாடு’’ என்று சிரித்தார்.

தொடர்ந்து பேசிய, ஜெகதீஷ், “ஒரு சொம்பு பழைய சோறு ரூ.10, ஒரு சொம்பு நீராகாரம் ரூ.10னு விலை வைத்து விற்பனை செய்றோம். பொன்னி குருணை பழைய சோறு, கம்பஞ்சோறு, நீராகாரம்னு எல்லாத்தையும் மண்பானையில வெச்சிருக் கிறதால குளிர்ச்சி குறையாம இருக்கு. அதைச் சாப்பிடுற எல்லோரும், `கரூர் வெயிலுக்கு இந்த உணவு அவ்வளவு அற்புதமா இருக்கு. இதை விடாம செய்ங்க’னு சொல்றாங்க. எங்க மூணு பேர் மனைவிகளும், ஆளுக்கு ஒருநாள்னு பிரிச்சுக்கிட்டு முதல்நாள் இந்த உணவு தயாரிப்பைச் செய்றாங்க. அவங்க மூணு பேரும் வேலையா இருந்தா, நாங்களே சேர்ந்து இதைத் தயாரிக்கிறோம். மக்களுக்கு நல்ல உணவைக் கொடுக்கணும்ங்கிறதுதான் எங்க விருப்பமா இருந்தது. விளையாட்டா, நம்பிக்கையில்லாமதான் இதை ஆரம்பித்தோம்.

ஜெகதீஷ், முத்துசாமி மற்றும் சரவணன்

ஆனா, 13 நாள்லேயே இதற்குக் கிடைத்த ரெஸ்பான்ஸை பார்த்து அசந்துபோய்விட்டோம். தான்தோன்றிமலை அரசுக் கலைக்கல்லூரி அருகே அடுத்த கிளை தள்ளுவண்டி பழைய சோறு கடையை ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கோம். ஏதேதோ ஜங்க் ஃபுட்டை வாங்கிச் சாப்பிடுறவங்களும், பழைய சோற்றை ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிடுறவங்களும்… கொஞ்சம் எங்களை திரும்பிப் பாருங்க!’’ என்றார்.

பழைய சோற்றை புதிய முயற்சியாகத் தரும் இந்த இளைஞர்களின் ஐடியாவுக்கு… லைக்ஸ்!

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com