சென்னை: எதிர்வரும் ஐபிஎல் சீசனில் காயமடைந்த கைல் ஜேமிசனுக்கு மாற்றாக தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான சிசாண்டா மகாலாவை அறிவித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. வரும் 31-ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளது.
32 வயதான சிசாண்டா மகாலா, தென்னாப்பிரிக்க அணிக்காக 5 ஒருநாள் மற்றும் 4 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். அண்மையில் அந்த நாட்டில் நடைபெற்ற SA20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்காக விளையாடி 12 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். இதில் இறுதிப் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்து வீரர் கைல் ஜேமிசனை கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 1 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்நிலையில், அவர் காயமடைந்த காரணத்தால் ஐபிஎல் 2023 சீசனில் இருந்து விலகினார். இந்த சூழலில் அவருக்கு மாற்று வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.