உலகின் உயரம் குறைந்த பாடிபில்டராக கின்னஸ் சாதனை படைத்த வீரருக்கு திருமணம் | World shortest bodybuilder, marries dream woman

Share

மும்பை: உலகின் மிகவும் உயரம் குறைந்த பாடிபில்டர் என கின்னஸ் சாதனை புரிந்த வீரர் தனது நீண்ட நாள் தோழியை அண்மையில் திருமணம் செய்துகொண்டார்.

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் பிரதிக் விட்டல் மொஹிதே (28). இவர் 3 அடி 4 அங்குல உயரம் கொண்டவர். இருந்தபோதிலும் பாடிபில்டிங் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபாடு கொண்டு போட்டிகளில் பங்கேற்று சாதித்து வந்தார்.

இந்நிலையில் தனது நண்பரின் வழிகாட்டுதலின் பேரில் கின்னஸ் சாதனைப் புத்தகத்துக்கு விண்ணப்பித்தார். இதைத் தொடர்ந்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இவரை ஆடவர் பிரிவில் உலகின் மிகவும் உயரம் குறைந்த பாடிபில்டர் என்று பதிவு செய்துள்ளனர். 2021-ம் ஆண்டு இந்த சாதனை, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில் தனது நீண்ட நாள் தோழியான ஜெயாவை (22), அண்மையில் மராட்டிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார் பிரதிக். ஜெயாவும், உயரம் குறைந்தவர்தான். அவர் 4 அடி 2 அங்குல உயரம் கொண்டவர். 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பார்த்து பிரதிக்குடன் தோழமையாக பழகி வந்தார் ஜெயா.இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

மேலும் தங்களது திருமண புகைப்படங்களை பிரதிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து பிரதிக் கூறியதாவது: 4 ஆண்டுகளாக ஜெயாவுடன் பழகி வந்தேன். உயரம் குறைந்து இருந்தபோதிலும் தொடர்ந்து பாடிபில்டிங் போட்டிகளில் பங்கேற்று வந்தேன். தொடர்ந்து எனக்கு ஜெயா ஊக்கம் கொடுத்து வந்தார்.

முதலில் உடற்பயிற்சி செய்வதும், உடற்பயிற்சிக் கருவிகளை கையாள்வதும் சிரமமாக இருந்தது. பின்னர் அது பழகிவிட்டது. பெற்றோர், நண்பர்களின் உதவியுடன் இந்த சாதனையைச் செய்துள்ளேன்.

என் நண்பர் ஒருவர் கூறியதன் பேரில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பித்தேன். கடந்த 2021-ல் உலகின் மிகவும் உயரம் குறைந்த பாடிபில்டிங் வீரர் என எனது பெயர் புத்தகத்தில் இடம்பெற்றது.

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவது எனது கனவு. அதை அடைந்ததில் நான் பெருமை கொள்கிறேன்.

ஜெயாவைப் பார்த்தவுடன் எனக்குப் பிடித்துவிட்டது. எனக்கென பிறந்தவர்இவர்தான் என அப்போது எண்ணிக்கொண்டேன். 4 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அவரைத் திருமணம் செய்துகொண்டேன்.

தற்போது எனக்குத் தேவை ஒரு நல்ல வேலை. அப்போதுதான் எனது மனைவியை நன்றாகப் பார்த்துக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com