அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு சிக்கல்?.. தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் ஐகோர்ட்டில் 3 வழக்கு..!

Share

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக 4 அணிகளாக செயல்பட்டு வருகிறது. இதனால், அதிமுக யாருக்கு சொந்தம் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டு நீதிமன்றங்களில் சட்டப் போராட்டமும் நடத்தப்பட்டது. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, கடந்த ஜூலை 11ம்தேதி பொதுக்குழுவை கூட்டி ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அதிமுக சட்ட விதிகளும் மாற்றி அமைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்தவாரம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக செயலாளர்கள் கூடி இதற்கான ஒப்புதலை அளித்தனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.  அக்கட்சியில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வரும் 26-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

அதன் அடிப்படையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனாலும், எடப்பாடி தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்ய மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது. இதனால் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரிவிட்டு மாலையிலேயே சட்டவிரோதமாக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் மட்டுமின்றி நீதிமன்றத்துக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் செயல். கட்சி விதிகளை திருத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் இருந்தாலும் பொதுச்செயலாளர் தேர்தல் விதிகளை திருத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு ஓ.பி.எஸ். தரப்பு மனு விசாரணைக்கு வரும் நிலையில் மேலும் 2 வழக்குகள் தொடரப்பட்டிருக்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com