கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு, திடீர் மாரடைப்புகள் அதிகம் ஏற்படுகின்றன என்று பல மருத்துவர்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி சென்னையில் சமீபத்தில் பேட்டியளித்த உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சௌமியா சுவாமிநாதன், “கோவிட் சூழலுக்குப் பிறகு மாரடைப்பு, நரம்பு மண்டல பாதிப்பு, சர்க்கரைநோய், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பாதிப்பதற்கான வாய்ப்பு 4-5% அதிகரித்துள்ளது. ஒருவருக்கு தொடர்ந்து மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணமாகவும் கோவிட் தொற்று அமைந்துள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இதுபோன்ற மாரடைப்பு ஏற்படுவதற்கு கோவிட் தடுப்பூசிதான் காரணம் என்றும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜூ ரஞ்சன் சிங், “கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு மாரடைப்பு நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. இதற்கு கோவிட் தடுப்பூசி காரணமா” என்றும் கேள்வியெழுப்பினார்.