
பட மூலாதாரம், Getty Images
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில், டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இரு அணிகளின் கேப்டன்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை, நெருங்கிய உறவினர் திருமணத்தில் பங்கேற்பதால் ரோஹித் சர்மா இன்றைய ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.
இதேபோல், ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ், டெஸ்ட் போட்டியின்போதே தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் ஆஸ்திரேலியா திரும்பினார். அவரது தாயார் உயிரிழந்த நிலையில், ஆஸ்திரேலியாவிலேயே குடும்பத்தினருடன் அவர் உள்ளார்.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் 2வது ஓவரிலேயே டிராவிஸ் விக்கெட்டை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணிக்கு முகமது சிராஜ் அதிர்ச்சியளித்தார்.
பட மூலாதாரம், Getty Images
மிட்செல் மார்ஷ் அதிரடி
டிராவிஸ் ஆட்டமிழக்கும்போது ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 2 ஓவர்களுக்கு 5 ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் – ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சிதறடித்தனர். குறிப்பாக, மிட்செல் மார்ஷின் பேட்டிங் மிரட்டலாக அமைந்தது. சிராஜ் வீசிய 4வது ஓவரில் மூன்று பவுண்டரிகளை மார்ஷ் விளாசினார்.
மறுபக்கம் சிறப்பாக விளையாடி வந்த ஸ்டீவன் ஸ்மித், ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தை ஆட முயன்றபோது பேட்டின் முனையில் பட்ட பந்து விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் கேட்சாக தஞ்சம் புகுந்தது.
அப்போது ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களை எடுத்திருந்தது. 2 விக்கெட்களை இழந்திருந்தாலும் எவ்வித அழுத்தமும் இல்லாமால் தனது அதிரடியை மார்ஷ் தொடர்ந்தார்.
குல்தீப் யாதவ் வீசிய 17வது ஓவரின் 3வது பந்தில் பவுண்டரி அடித்து தனது அரை சதத்தை கடந்த மார்ஷ் அடுத்த பந்தையும் பவுண்டரிவுக்கு விரட்டினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா 100 ரன்களை கடந்தது.
பட மூலாதாரம், Getty Images
திருப்பம் தந்த ஜடேஜா
ஜடேஜா வீசிய 18வது ஓவரின் கடைசி பந்தை சிக்ஸருக்கு விரட்டிய மார்ஷ், குல்தீப் யாதவ் வீசிய 19ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார்.
அவரது விக்கெடை வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிக்கு அடுத்த ஓவரில் பலன் கிடைத்தது. ஜடேஜா வீசிய 20வது ஓவரின் 3வது பந்தை பவுண்டரிக்கு விளாசிய மார்ஷ் அடுத்த பந்தையும் தூக்கியடிக்க முயன்றார். ஆனால், அதை முகமது சிராஜ் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இதையடுத்து 5 சிக்ஸர், 10 பவுண்டரி உட்பட 81 ரன்களில் மிட்செல் மார்ஷ் வெளியேறினார்.
அடுத்தடுத்து விக்கெட்கள் இழப்பு
அடுத்த மூன்று ஓவர்களிலேயே மார்னஸ் லபுஷேன் 15 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
முகமது ஷமி வீசிய ஆட்டத்தின் 28வது ஓவரில் ஜோஷ் இங்க்லிஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷமி வீசிய 30 ஓவரில் கேமரூன் கிரீன் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். 30 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்து களத்தில் ஆடி வருகிறது.
பட மூலாதாரம், Getty Images
19 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலியா
அதன் பின்னர் ஆட்டம் முழுக்க முழுக்க இந்திய பந்துவீச்சாளர்கள் பக்கம் திரும்பியது. மேக்ஸ்வெல் (8), மார்கஸ் ஸ்டோனிஸ் (5), சீன் அப்போட் (0), ஆடம் ஜாம்பா(0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து நடையை கட்டினர். இறுதியில் 35.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 188 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்தது. இந்திய தரப்பில் முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் ரவிந்திர ஜடேஜா 2 விக்கெட்களையும், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.
19.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் என்ற வலுவான நிலையிலேயே ஆஸ்திரேலியா இருந்தது. ஆனால், முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோரின் தாக்குதலில் அடுத்த 16 ஓவர்களில் 7 விக்கெட்களை ஆஸ்திரேலிய அணி இழந்தது. 169 – 5 என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலியா மேற்கொண்டு 19 ரன்களை மட்டும் சேர்த்து 5 விக்கெட்களை இழந்தது.
தொடக்கமே அதிர்ச்சியளித்த இந்தியா
189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கோடு இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. இஷான் கிஷன்- சுப்மான் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலேயே நிரூபித்தனர். ஸ்டோனிஸ் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து இஷான் கிஷன் வெளியேறினார்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் டாப் ஆர்டரை சிதைத்த ஸ்டார்க்
5 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த இந்தியாவுக்கு 5வது ஓவரிலேயே மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்து ஸ்டார்க் மிரட்டினார். அப்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து சுப்மான் கில், கே.எல். ராகுல் ஜோடி சேர்ந்தனர். சுப்மான் கில் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்னில் இருந்தபோது ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பந்தை தூக்கி அடிக்க அவர் முயற்சித்தபோது லபுஸ்சேனிடம் கேட்சாக அது மாறியது.
இதையடுத்து கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். பவுண்டரியுடன் தனது இன்னிங்க்ஸை தொடங்கிய பாண்டியா கே.எல். ராகுலுடன் இணைந்து மேற்கொண்டு விக்கெட் சரியாமல் பார்த்துகொண்டார். ஓவருக்கு ஒரு பவுண்டரி அடித்து ரன்ரேட் சரியாமல் இருவரும் பார்த்துகொண்டனர். இவர்கள் விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் எவ்வளவோ முயன்றனர். எனினும் 20வது ஓவரில்தான் அவர்கள் முயற்சிக்கு பலன் கிடைத்தது. ஸ்டோனிஸ் வீசிய பவுன்சரை பாண்டியா கூக்ஷாட் ஆட முயன்றபோது கேமரூன் கிரீனிடம் கேட்சாக அது மாறியது. அப்போது அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்பிற்கு 83 ஆக இருந்தது.
இதையடுத்து கே.எல். ராகுலுடன் ரவிந்திர ஜடேஜா இணைந்தார்.
ஆஸி. கனவை தகர்த்த கே.எல்.ராகுல் – ஜடேஜா
ஆஸ்திரேலியா அணியை போன்று இந்திய அணியின் தொடக்க விக்கெட்களும் மளமளவென சரிந்ததால் ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் சென்றபோது போன்ற தோற்றம் ஏற்பட்டது. மீதமுள்ள விக்கெட்களையும் விரைவாக வீழ்த்திவிட்டு வெற்றி வாகை சூடிவிடலாம் என்று ஆஸ்திரேலியா நினைத்தது. ஆனால், இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் கே.எல்.ராகுல்- ஜடேஜாவின் ஆட்டம் இருந்தது. வெற்றி இலக்கு குறைவானதாக இருந்ததால் ஷாட் அடித்து மேற்கொண்டு விக்கெட் வீழ்வதை தவிர்த்து ஒவ்வொரு ரன்னாக சேர்ப்பதில் இருவரும் முனைப்பு காட்டினர். கிடைத்த நல்ல பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு அனுப்பினர். இவர்கள் விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் எவ்வளவோ முயன்றும் பலனளிக்கவில்லை.
கடந்த சில ஆட்டங்களாகவே ரன்கள் குவிக்க தவறிவந்த கே.எல்.ராகுல், இந்த முறை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேமரூன் கிரீன் வீசிய 34 ஓவரின் 3வது பந்தில் ஒரு ரன் அடித்து தனது 13வது அரை சதத்தை ராகுல் எட்டினார். அதே ஓவரின் கடைசி பந்தை கே.எல்.ராகுல் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 150 ரன்களை கடந்தது. அரை சதத்தை கடந்ததும் கே.எல்.ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆடம் ஜம்பா வீசிய 36வது ஓவரில் கே.எல். ராகுல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடிக்க அந்த ஓவரில் மட்டும் இந்தியாவுக்கு 17 ரன்கள் கிடைத்தது. ஆட்டமும் இந்தியா பக்கம் திரும்பியது.
இறுதியில் 39.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றனர். கே.எல்.ராகுல்- ஜடேஜா இணை 100 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் கொடுத்து அணியின் வெற்றிக்கு பெரிய பங்காற்றினர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: