அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக முதல்வர் இருப்பார்: அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு

Share

பூந்தமல்லி:அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக  முதல்வர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என்று அமைச்சர் சா.மு.நாசர் கூறினார். திருவள்ளூர் மத்திய மாவட்டம், திருவேற்காடு நகர திமுக சார்பில், நேற்று திருவேற்காடு நகராட்சி அலுலவகம் அருகே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நகர செயலாளரும் நகரமன்ற தலைவருமான என்இகே.மூர்த்தி தலைமை தாங்கினார். பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, வி.பி.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று, 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு லேப்டாப், 1000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ‘‘ஜெயலலிதா இறந்த பிறகு, அவரது சமாதியில் தியானம் செய்த ஒபிஎஸ், தன்னிடம் ஜெயலலிதா ஆவி பேசியதாக கூறினார். என் தாய் இறந்த பிறகு, அவரது நகைகள் காணவில்லை என குடும்பத்தினரிடையே சண்டை ஏற்பட்டது. இதனால் எனது தாயின் கல்லறையில் அமர்ந்து நானும் தியானம் செய்தேன். ஆனால், எனது தாய் பேசவில்லை. அதற்குப் பதிலாக, அங்கு எரிக்கப்பட்ட பிணங்களின் துர்நாற்றம்தான் வந்தது. இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகள் மூலம் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் அண்டப் புளுகன், ஆகாசப் புளுகன் என்பதை அறியலாம்.

கொங்கு மண்டலத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில்கூட அதிமுக  இவ்வளவு குறைவாக வாக்குகள் வாங்கியது கிடையாது. தற்போது எடப்பாடி தலைமையிலான அதிமுக, சில வாக்குச்சாவடிகளில் இரண்டு இலக்க வாக்குகளே பெற்றுள்ளன. அதே நேரத்தில், அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு அப்பகுதி மக்கள் கொடுத்த அங்கீகாரம்தான், இந்த மகத்தான வெற்றி. கடந்த 10 ஆண்டுகளாக இருண்டு கிடந்த தமிழ்நாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றிப் பாதையில் அழைத்து செல்வதைப் போல், இந்தியாவுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்வழி காட்ட வேண்டும் என அகில இந்திய தலைவர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

அக்காலத்தில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், கலைஞர் ஆட்சியைத் தொடர்ந்து, தற்போது தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடந்து வருகிறது. இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, யார் இந்திய பிரதமராக வரவேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் இருப்பார். பிரதமராக கூடிய தகுதியும் உடையவர், இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடியவர், முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று அகில இந்திய தலைவர்கள் கூறி வருகின்றனர்.’’ என்று கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com