நன்றி குங்குமம் டாக்டர்
உணவு ரகசியங்கள்
“B” ரத்தவகை உள்ளவர்கள் என்ன சாப்பிட வேண்டும்?
ரத்தவகை “B” யானது, சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் என்றும் தற்போது பத்து பேரில் ஒருவர் “B” ரத்த வகையைச் சார்ந்தவராக இருக்கிறார் என்றும் கருதப்படுகிறது. ரத்தவகை “B”மற்ற ரத்த வகைகளைவிட ஒரு முறையான புவியியல் சார்ந்த மனித பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பருவகால மாற்றங்களாலும், மனித இனம் இடம்பெயர்ந்ததாலும் பரிணமித்திருக்கலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. ரத்த வகை “B” மனிதர்கள், ஜப்பான், மங்கோலியா, சீனா மற்றும் இந்தியாவில் பரவலாகக் காணப்படுகின்றனர். வடதிசை சீனாவிலும், கொரியாவிலும் முந்தைய காலத்தில் இந்த ரத்தவகை மனிதர்கள் அதிகமாக வசித்துள்ளனர்.
“B” வகை ரத்தம் உள்ளவர்களுக்குத் தேவையான உணவுகள்
“B”ரத்த வகை மனிதர்கள் பழங்கள், பச்சைக் காய்கள், கீரைகள், குறைந்த கொழுப்பு உள்ள பால், முட்டை ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இறைச்சியில்லாத உணவு எப்பொழுதும் இவர்களுக்கு நன்மை அளிக்கும். வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியங்கள் இவர்களுக்குத் தேவையான கலோரியையும் மாவுச்சத்தையும் தரவல்லவை. இவற்றுடன் கைக்குத்தல் அரிசி, வறுத்த, புளிக்க வைத்த அல்லது முளைகட்டிய காராமணி, பச்சைப் பயறு போன்ற சிறுபயறு வகைகள் உடலுக்குத் தேவையான புரதத்தை அளிப்பதுடன் ஒவ்வாமை ஏற்படுத்தாமல் பாதுகாப்பளிக்கும்.
மக்னீசியம் அதிகம் உள்ள உணவுகளான அடர் பச்சை நிற கீரைகள், வெற்றிலை, பருப்புக்கீரை, தாமரைத்தண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயத்தாள், மாம்பழம் போன்றவை இந்த “B” வகை ரத்தம் உள்ளவர்களுக்கு ஏற்படும் வைரஸ் தொற்று வராமல் தடுக்கும் திறனை உடலுக்கு அளிக்கிறது. பழவகைகளில், திராட்சை, வாழைப்பழம், பப்பாளி, அன்னாசிப்பழம் இவர்களுக்கு மிகுந்த நன்மையை செய்கிறது. அன்னாசிப்பழத்திலுள்ள புரோமலின் என்ற என்சைம், ரத்தம் உறைந்து கட்டிகள் ஏற்படுவதைத் தடுப்பதுடன், இவர்களின் செரிமான சக்தியையும் போதுமான அளவு பராமரிப்பில் வைக்கிறது.
சிறந்த செரிமானத்தைக் கொடுக்கக்கூடிய பொருட்களான மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சி, புதினா, கொத்துமல்லி, ஓமம், சுக்கு, திப்பிலி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்து வகையிலும் இவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
“B” வகை ரத்தம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
“B”ரத்த வகை உடையவர்கள், கோதுமை மற்றும் சோளம் சார்ந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதால் ஒவ்வாமை ஏற்படுவதைத் தவிர்க்கலாம். பாப்பரை எனப்படும் பக்வீட் (Buckwheat) போன்ற உணவுப்பொருட்களும் இந்த ரத்தவகை உள்ளவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. வட ஐரோப்பாவைத் தாயகமாகவும், ரஷ்யா மற்றும் போலந்து நாட்டின் பாரம்பரிய உணவுகளில் சேர்க்கப்படும் முக்கிய உணவுப்பொருளாகவும் உள்ள பக்வீட், அடிப்படையில் தானியவகை அல்லாத ஒரு செடியின் பழவிதைகளாகும்.
இந்த பக்வீட் பொருளை பயன்படுத்தி பிஸ்கட், நொறுக்குத்தீனிகள் மற்றும் உடனடி உணவு தயாரிப்புப் பொடிகள் மற்றும் கலவைகள் தற்போது வணிகநோக்கில் அதிகரித்துள்ளன. இன்றைய காலகட்டத்தில் நமது பாரம்பரிய உணவுப்பொருட்களை விட அயல்நாட்டு உணவுப்பொருட்களில்தான் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளதாக பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களில் அதிகாரப்பூர்வமாக காண்பிக்கப்படுகிறது.
இப்பொருட்களை வாங்கி உண்பதைத் தவிர்ப்பதால், நமது பாரம்பரிய ரத்த வகைக்கும், வசிக்கும் சூழலுக்கும், நடைமுறை வாழ்க்கைக்கும், உடலமைப்பிற்கும் என்றும் நல்லதாகும்.
பீன்ஸ் வகைகளில் Phaseolus vulgaris என்று கூறப்படும் பிளாக் பீன்ஸை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அமெரிக்காவை பூர்வீக இடமாகக்கொண்ட இந்த பிளாக் பீன்ஸ், அமெரிக்கா, கிழக்கு ஆசியா மற்றும் சீன உணவுகளில் தாராளமாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை, பஞ்சாப் மாநில உணவுகளில் சேர்க்கப்படுகிறது. சில வகை கேக் வகைகளிலும், பீன்ஸ் சாஸ் மற்றும் கெட்செப் உணவுகளிலும் பயன்படுத்தப்படுவதால், இவ்வகையான பதப்படுத்தப்பட்ட ரெடிமேட் உணவுகளையும் “B”ரத்தவகை உடையவர்கள் உண்ணக்கூடாது. பொதுவாகவே, பிளாக் பீன்ஸ் உணவிலுள்ள லெக்டின் புரதமானது, குறைந்த அளவில் உண்ணும்போது எந்த ஒவ்வாமையும் ஏற்படுத்துவதில்லை, ஆனால் அதையே அடிக்கடி சாப்பிடுவதாலும், அதிக அளவு உணவில் சேர்ப்பதாலும் உடலில் சிக்கல்களை உண்டாக்குகிறது என்று டாக்டர் ஸ்டீவன் கன்ட்ரி என்பவர் “The plant paradox: The hidden dangers in ‘healthy’ foods that cause disease and weight gain” என்னும் தமது புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
சைவ உணவுகளே பெரும்பாலும் “B” ரத்தவகை உடையவர்களுக்கு ஏற்றதாகும். மீன்களில், சிறிய அளவில் உள்ள வெள்ளை நிற மீன்களான நெத்திலி, காரைமீன் போன்றவற்றை எப்பொழுதாவது உணவில் குழம்பாக சேர்த்துக்கொள்ளலாம். முட்டை, கோழி மற்றும் ஆட்டிறைச்சி இவர்களுக்கு செரிமானக் கோளாறு மூலமாக, ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். “B” வகை ரத்தத்தை உறைய வைக்கும் லெக்டின் (agglutinating lectin) என்ற பொருள் கோழி இறைச்சியின் தசையில் உள்ள திசுக்களில் உள்ளதால் மூளையின் செயல் திறன் இழப்பு மற்றும் எதிர்ப்புத்திறன் சார்ந்த நோய்களை ஏற்படுத்திவிடக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
இவை, “B” வகை ரத்தம் உடையவர்களின் வளர்சிதை மாற்றத்தில் சிக்கல்களை உண்டாக்கி உடலில் நீர்சேர்தல், மயக்கம் போன்ற நிலையை ஏற்படுத்துவதுடன், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைத்து உடல் நலத்தையும் கெடுத்துவிடுகிறது. மாமிச உணவு உண்டாலே அஜீரணம் ஏற்படுகிறது என்று கூறுபவர்களிடம் அவர்களது ரத்த வகையைக் கேட்டறிந்து, அவர்கள் “B” ரத்த வகை உடையவர்களாக இருப்பின், மேற்கூறியவாறு உணவில் சிறு சிறு மாற்றங்களை ஏற்படுத்திவிட்டால், பலவிதமான உடல் நலக்கோளாறுகளைத் தவிர்க்கலாம்.
தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்