சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடரில் ரஷ்யா பங்கேற்க தடை – News18 Tamil

Share

உலக நாடுகள் கொண்டாடும் சதுரங்கத்தின் உலகக் கோப்பை என வர்ணிக்கப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. சுமார் 200 நாடுகளை சேர்ந்த உலகின் மிகச் சிறந்த 2000-க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் ஒருங்கே சங்கமிக்கும் இந்த மௌன யுத்தம் ஜூலை 28 ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் தமிழக அரசால் நடத்தப்படவுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போரால் தமிழ்நாட்டிற்கு கிடைத்த இந்த தொடரில் ரஷ்யா பங்கேற்க தடை தொடரும் என இந்தப் போட்டியை நடத்தக்கூடிய இயக்குனரும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளருமான பரத் சிங் சவுகான், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் உறுதிபடுத்தி உள்ளார். மேலும் இதுவரை 137 நாடுகளைச் சேர்ந்த 250 ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை நடைபெற்ற 43 ஒலிம்பியாட் தொடர்களில் சோவியத் யூனியனாக 18 முறையும், ரஷ்யாவாக 8 முறையும் தங்கப் பதக்கத்தை வசப்படுத்தியுள்ளனர் ரஷ்ய வீரர்கள். மாமல்லபுரம் ஒலிம்பியாட் தொடரில் நடப்பு சாம்பியனான ரஷ்யாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இப்போட்டிக்கான தர வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Also Read : கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு… முதல் தகவல் அறிக்கை நகல் வெளியீடு

மேலும் சமீப காலமாக சீனாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் சீன வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையும் உருவாகி உள்ளது. இதுவரை சீன அணியும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க பதிவு செய்யவில்லை என கூறுகிறார் போட்டியை நடத்தக்கூடிய மைதானத்தின் பொறுப்பாளரும் தமிழ்நாடு சதுரங்க சங்கத்தின் துணைத் தலைவருமான ஆனந்த் ராமன்.

செஸ் ஒலிம்பியாட் தொடரில் முதல் மூன்று இடங்களுக்குள் இந்திய அணி கோலோச்சுகிறது. அத்துடன் ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கத்தையும், நேருக்கு நேர் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் ஒரு வெண்கலத்தையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. சொந்த நாட்டில் போட்டி நடைபெறுவது நமக்கு சாதகமாக அமைந்தாலும் அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா தங்கப்பதக்கத்தை கழுத்தில் ஏந்துமா என்பதே அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com